மின் எண்ணுடன் ஆதார் எண் இணைப்புக்கு எதிர்ப்பு, மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரி அ.தி.மு.க.வின் இ.பி.எஸ். அணி தமிழகம் முழுமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்மையில் நடத்தியது. ஆனால், தூத்துக்குடியின் கண்டன ஆர்ப்பாட்டக் களமோ, அதன் நோக்கத்திலிருந்து விலகியதுடன், அதன் தெற்கு மா.செ.வான சண்முகநாதனோ தன் எதிரணியினர் மீதான உட்கட்சி மனக்கசப்பைத் தீர்த்துக் கொள்கிற மேடையாக்கியது உப்பு நகரின் இலை வட்டாரத் தொண்டர்களை உஷ்ணமாக்கிவிட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக கூட்டத்தைச் சேர்த்திருந்தார் மா.செ.வான சண்முகநாதன். நகரில் இவரின் முன்னணி எதிரணியினரான முன்னாள் அமைச்சரும், மாஜி மா.செ.வும், அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வுமான சி.த.செல்லப்பாண்டியன், அகில இந்திய எம்.ஜி.ஆர்.மன்ற துணை செ.வான ஆறுமுகநயினார், மற்றும் தலைமை கழக நட்சத்திர பேச்சாளரான எஸ்.டி.கருணாநிதி உள்ளிட்டோர் தங்களது தரப்பில் நூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பங்கேற்றாலும், மா.செ.வின் கூட்டத்துடன் ஒட்டாமல் மேடையின் ஓரத்தில் ஒதுங்கியே நின்றிருக்கிறார்கள். இதனை மா.செ.சண்முகநாதனும் நோட்டமிட்டிருக்கிறார்.
ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் நிர்வாகிகளின் பேச்சிற்குப் பின் மைக் பிடித்த மா.செ.சண்முகநாதன் கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே செல்லப்பாண்டியனைப் பற்றி பேசினார். “சிலவங்க, இந்தக் கட்சிக்குப் போனா மா.செ. பதவி கிடைக்குமா, அந்தக் கட்சிக்கு போனா பதவி கிடைக்குமா. நாலு தொகுதி கிடைக்குமா, இல்ல மூணு தொகுதி கிடைக்குமான்னு மா.செ.வா ஆயிறலாமான்னு பதவிக்காக அலையுறாங்க. அப்படிப்பட்டவங்க இந்த மேடையில ஏற நெனைச்சா, யாருக்கும் அருகதை கிடையாது. அடிச்சி வெரட்டுவாங்க என்பதை இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அங்க மரியாதை இல்லன்னா இங்க வருவோம், இங்க மரியாதை இல்லன்னா வேற எங்கயும் போவோம். அப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு அ.தி.மு.க. கட்சியில இடமில்லை” என உரக்கப் பேசியது திரண்டிருந்த தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் சலசலப்பும் கிளப்பியிருக்கிறது.
மா.செ.சண்முகநாதன், தன் எதிரணி செல்லப்பாண்டியனை மனதில் வைத்துத்தான் உட்கட்சிப் பகையைத் தீர்க்கிறார் என தெளிவாகப் புரிந்து கொண்ட செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்கள் பரபரப்பாக, அதனை தணிக்கிறவகையில் செல்லப்பாண்டியன் வேறெதுவும் நடந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில் தன் ஆதரவாளர்களுடன் கிளம்பிப் போயிருக்கிறார்.
நகரின் எடப்பாடி அணியின் சில முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, பொது மேடையில் மா.செ. சண்முகநாதன் என்னதான் கடுப்பு இருந்தாலும் அப்படி பேசியிருக்கக் கூடாது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தூத்துக்குடி மாநகரம் அடங்கிய மூன்று தொகுதிகளின் தெற்கு மா.செ.வாக சண்முகநாதன் நியமிக்கப்பட்ட இரண்டு வருடமாகவே மாநகரில் கட்சிக்குள்ளேயே பிரச்சினைதான். தன் பகையை வெளிப்படுத்துகிற வகையில் மாநகரின் 42க்கும் மேற்பட்ட வார்டுகளின் செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்கள் சீனியர் நிர்வாகிகளின் பொறுப்புகளைப் பறித்த சண்முகநாதன் அதில் தனக்கு வேண்டப்பட்டவர்கள், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் என்று கட்சி சிந்தனை அல்லாதவர்களை நியமித்த போதே நகர அ.தி.முக.வில் பெரிய பிளவே ஏற்பட்டு விட்டது.
அடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தனது தொகுதியின் ஸ்ரீவை யூனியனின் சேர்மன் பொறுப்பை தி.மு.க. கைப்பற்றுகிற முயற்சியிலிறங்கியபோது, மா.செ.வின் சொந்த யூனியனே பறிபோனால் கட்சித் தலைமை தன்னைக் கேள்வியால் குடைந்து விடும் என்ற பீதியில் அதனைக் தடுக்கிற வழியில் ஈடுபட்டிருக்கிறார் சண்முகநாதன். 17 அ.தி.மு.க. மாவட்டக் கவுன்சிலர்களைக் கொண்ட தூத்துக்குடியின் மாவட்ட பஞ்சாயத் தலைவர் பொறுப்பை தி.மு.க.விற்கு தாரை வார்க்கிற வகையில் கவுன்சிலர்களை ஆதாய அடிப்படையில் தி.மு.க.விற்கு அணி மாறச் செய்து மாவட்டப் பஞ்சாயத்தின் அ.தி.மு.க. தலைவியான சத்யாவைப் பதவியிறக்க வைத்து தி.மு.க. வசமாக்கியவர். மா.செ.வின் இந்தப் பரிவர்த்தனையால் ஸ்ரீவை யூனியன் தப்பியது. இதனால் ஆவேசப்பட்ட கட்சித் தலைமை அணி மாறிய 17 கவுன்சிலர்களையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கியது. அப்படி நீக்கப்பட்டவர் தான், மாவட்டக் கவுன்சிலரும், ஸ்ரீவை யூனியனின் அ.தி.மு.க. ஒ.செ.வுமான அழகேசன். அவர் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் சண்முகநாதனுடனிருக்கிறார். யாரும் அவருடன் தொடர்புகொள்ளக் கூடாது என கட்சித் தலைமை கட்சியிலிருந்து நீக்கிய அவரை தலைமையே சேர்க்காத போது மா.செ.சண்முகநாதன் அவரை எப்படி மேடை ஏற்றினார். கட்சியின் சூப்பர் அதிகாரம் எடப்பாடிக்கா, இல்லை மா.செ.சண்முகநாதனுக்கா.
ஒ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் என்று கட்சி இரு கூறானபோது, ஒ.பி.எஸ். தன் அணிக்கான நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மா.செ.வாக தூத்துக்குடியின் வலுவான புள்ளியான சி.த.செல்லப்பாண்டியனை அறிவித்தார். அதனை ஏற்க சி.த. செல்லப்பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது தூத்துக்குடியில் முக்கிய கட்சி புள்ளியான சி.த. செல்லப்பாண்டியனை அணி மாறினால் தனது அணி பலமின்றிப் போய்விடும் என்று கணக்குப் போட்ட எடப்பாடி தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலமாக செல்லப்பாண்டியனை சென்னைக்கு வரவழைத்து விட்டார்.
தூத்துக்குடி மாநகரம், ஒட்டப்பிடாரம் இரண்டையும் பிரித்து அதற்கு உங்களை மா.செ.வாக்கி விடுகிறேன். எங்கும் போக வேண்டாம். எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். கட்சி தொடர்பான வழக்கு முடிகிற வரையில், கட்சியின் எந்த அணிக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க மாட்டேன் என்று கோர்ட்டிற்கு தெரியப்படுத்தி விட்டேன். அது முடிகிற வரையில் பொறுமையாய் இருங்கள். அதன் பின் முறைப்படி அறிவித்து விடுகிறேன் என்று எடப்பாடி வாக்கு தொடுத்ததால் பொறுமையாய் இருக்கிறார். சி.த. செல்லப்பாண்டியன் இவைகள் அனைத்தும் மா.செ. சண்முகநாதனுக்கும் தெரியும். நீதிமன்ற முடிவும் விரைவில் தெரிந்துவிடும். தூத்துக்குடி மட்டும் தன்னிடமிருந்து பறிபோனால் ஸ்ரீவைகுண்டத்தை பூர்வீகமாகவும் கொண்ட, தன் மா.செ. பதவிக்கு மவுசுமில்லை அர்த்தமும் கிடையாது. தனது அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட சூன்யமாகிவிடும் என்ற பீதியிலிருக்கிறார் மா.செ. சண்முகநாதன். ஏனெனில் மாவட்டத்தில், மாவட்டத்தின் கிங்மின் போன்றது தூத்துக்குடி மாநகரம். அதை வைத்து தான் சண்முகநாதன் இங்கு அரசியல் லாபி செய்து கொண்டிருக்கிறார். அந்த மாநகரம் ஒன்று மட்டும் பறிபோகுமேயானால் ஏறத்தாள அவர் ஜீரோ தான். அதன் காரணமாகத் தான் கண்டனக் கூட்டமேடையில், பதவிக்கு அலையுறாங்க. பச்சோந்திகளுக்கு இடமில்லை என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் சண்முநாதன்” என்கிறார்கள்.
சண்முகநாதனின் இந்த எல்லை தாண்டிய பேச்சு சி.த. செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள் மூலம் எடப்பாடி வரை போக அதிர்ந்த அவரோ, ‘பொறுமையாய் இருங்கள். கோர்ட் தீர்ப்பிற்கு பின் நடவடிக்கை’ என்றிருக்கிறாராம். நாம் செல்லப்பாண்டியனைத் தொடர்பு கொண்டதில் அவரிடமிருந்து பதில் இல்லை. அவரது முக்கிய ஆதரவாளர்கள் சிலரோ, தலைமைக்கு அனைத்தையும் தெரியப்படுத்தியாகி விட்டது. தலைமையின் அறிவிப்பிற்குப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். உட்கட்சிப் பகையால் தவிப்பும், பரபரப்பும் விறுவிறுப்புமாகவும் போய் கொண்டிருக்கிறது உப்பு நகரின் எடப்பாடி பிரிவு.