சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகளவில் திருமண மண்டபம் முன்பு குவிந்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழுவில் ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து, அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியைக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்தும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரட்டைத் தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் சங்கடம் மற்றும் தாமதம் ஏற்பட்டது. எனவே, அ.தி.மு.க. எழுச்சிப் பெற ஒற்றைத் தலைமை தேவை என பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. நிலைத்து நிற்க, மீண்டும் ஆட்சிக்கு வர வலிமையான ஒற்றைத் தலைமை தேவை. தி.மு.க. அரசை வலிமையுடன் எதிர்கொள்ள ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தீர்மானத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.