ஆவின் பொருட்களை தமிழக அரசு மக்களுக்கு எட்டாக்கனி ஆக்கியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆவின் பால் மற்றும் நெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் தற்போது விலை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். சமையலுக்கான 500 கிராம் வெண்ணெய் ரூ.255லிருந்து ரூ.265ஆகவும் 100 கிராம் வெண்ணெய் ரூ.52 இல் இருந்து ரூ.55 ஆகவும் விலை உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது. உப்பு கலந்த 500 கிராம் வெண்ணெய் ரூ.250லிருந்து ரூ.260ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ52 இல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விலை உயர்வு இன்றிலிருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தினை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி ஏழைகளுக்கு ஆவின் பொருட்களை இந்த அரசு எட்டாக்கனி ஆக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்த அவர் பதிவில், “கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாக்கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த அரசு.
இன்று வெண்ணெய் விலையையும் கிலோவிற்கு ௹. 20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதைக்கூட பெறவிடாமல் தடுக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.