உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் போட்டி கண்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவின் முகமாகவே உள்ளது. கோவாவில் மட்டும் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தாலும் தற்பொழுது 18 இடங்களில் அங்கு பாஜக முன்னனியில் உள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் உள்ளது. ஐந்து மாநிலத்தில் மொத்தமாக உள்ள 690 தொகுதிகளில் வெறும் 68 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் முன்னனியில் உள்ளது.
பின்னடைவில் காங்கிரஸ் உள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் 'நெட்ஃப்ளிக்ஸில் நான் இப்பொழுது என்ன பார்க்கலாம் என யாராவது பரிந்துரைக்க முடியுமா?' என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் தோல்வியில் கவலையில் உள்ள தொண்டர்களை கோபமூட்டிய இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.