ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதேசமயம் இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் குறித்து வேட்பாளரை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு அருகே வில்லரசன் பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சுமார் 7 மணி நேரம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று தனது பலத்தை நிரூபித்தது போல் தனது அணியும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் நாளை மீண்டும் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக 106 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ள நிலையில் மேலும் 5 பேர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் இடைத்தேர்தலில் தனது அணியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.