ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஒருவிதப் பதற்றத்தோடு இருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணியில் இருந்த த.மா.காவை தவிர பல கட்சிகள் ஆதரவு தராத நிலையில், பிரதான கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு என்று வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக ஒருபுறம் ஓபிஎஸ் அணி, மறுபுறம் ஈபிஎஸ் அணி என பேச்சுவார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் ஏதாவது ஒரு முடிவை சொல்லுங்கள் என எடப்பாடி காத்துக்கொண்டே இருந்தார். மற்றொரு பிரச்சனையாக சின்னம் கிடைப்பதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு பிரச்சனையும் பெரிதாக இருந்தது. முதலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை தேர்தலில் போட்டியிடுங்கள் என எடப்பாடி கேட்டுக்கொண்டாராம். ஆனால் அவர் பின் வாங்க, தற்போது அறிவித்துள்ள வேட்பாளரான தென்னரசுவும் ஒரு கட்டத்தில் எனக்கு தேர்தலில் நிற்கும் ஆசை இல்லை என எடப்பாடியிடம் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களே செலவு செய்ய வேண்டும் என முதலில் கூறப்பட்டதாம். பிறகு அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து தென்னரசுவை சமாதானப்படுத்தி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு 2001 முதல் 2006 வரை, அடுத்தாக 2016 முதல் 2021 வரை என இரண்டு முறை இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவில் ஒரு எளிய மனிதராக இருப்பவர் தென்னரசு. ஒரு வழியாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார் என அதிமுக எடப்பாடி அணியினர் உற்சாகமாக உள்ளார்கள்.