சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, அதிமுகவை மீட்கப் போவதாக சமீபகாலமாக தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் சசிகலாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அண்மையில், "எம்.ஜி.ஆர் கூட சில நேரங்களில் அரசியல் முடிவுகள் குறித்து என்னிடம் கேட்பார். நானும் பதில் சொல்வேன். அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் என்னிடம் ஆலோசனை கேட்பார்" என சசிகலா தொண்டரிடம் பேசிய ஆடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில், "சசிகலா அதிமுகவிலிருந்த காலத்திலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது" என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலத்திலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது'' என்றார். மேலும், கரோனா தடுப்பூசி குறித்து பேசிய அவர், "ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது" என்றார்.