நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதிமுக கட்சி கலகலக்க தொடங்கிவிட்டது.
வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் இந்தியா முழுக்க பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக அரசு நீடிக்குமா என்பது நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் முடிவில்தான் உள்ளது. இதில் அதிமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பேசத்தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான் உள்கட்சி பிரச்சனை ஈரோடு மாவட்டத்தில் பூதாகரமாக ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் பவானி தொகுதி எம்எல்ஏவும் சுற்றுச்சூழல் அமைச்சருமான கருப்பனனுக்கும் கோஷ்டி யுத்தம் நீடித்து வந்தது. நடந்த தேர்தலில் அமைச்சர் கருப்பணன் பெருந்துறை தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக வேலை செய்தார் என்று பட்டியல் போட்டு அதிமுக தலைமைக்கு புகார் கடிதம் கொடுத்து இருந்தார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த பின்னணியில்தான் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தோப்பு வெங்கடாசலம் தனக்குள்ள கட்சி பொறுப்பான ஜெ பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தொடர்ந்து கட்சியில் இருந்தும் விலகப் போவதாகவும் கூறி எடப்பாடி பழனிச்சாமி இடம் கடிதம் கொடுத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தோப்பு வெங்கடாசலத்தை சமாதானப்படுத்தி பேசியிருக்கிறார். ஆனால் தோப்பு வெங்கடாசலம் எதற்கும் பிடி கொடுக்காமல் நான் விலகுவது விலகுவதுதான் எனக் கூறியிருக்கிறார். பிறகு எதுவும் கூறாமல் வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலத்தை தொடர்ந்து அதிமுகவில் பல எம்எல்ஏக்கள் வெளியே வர முடிவு செய்துள்ளதாக கொங்கு மண்டல அதிமுக வட்டாரம் கூறுகிறது. மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. சிவசுப்பிரமணியம் தோப்பு வுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரும் கட்சியிலிருந்து வெளிவருவார் எனக் கூறுகிறார்கள். அதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள 5 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகுவார் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றாலும் இப்போது உள்ள எம்எல்ஏக்கள் விலகுவது இந்த ஆட்சியை பலவீனப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரதமர் மோடி கொடுக்கிற விருந்தில் கலந்துகொள்ள டெல்லி செல்வதற்கு முன்பே அவரது கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.