டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிக்காக ரஜினி, சந்தன வீரப்பன் ஏரியாவான பந்திப்பூர் காட்டுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட பரபரப்பான நேரத்தில், முள் குத்தி அவர் திரும்பி வந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது, டிஸ்கவரி சேனலில் இங்கிலாந்தைச் சேர்ந்த பியர் கிரில்ஸ் தயாரித்து வழங்கும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பிரபலமான ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிக்காக உலக அளவிலான பிரபலங்களை கிரில்ஸ், ஆபத்து நிறைந்த காடுகளுக்குள் சாகஸப் பயணம் அழைத்துச் செல்வார். பிரபலங்கள் அனுபவிக்கும் இந்த திக்... திக்... நிமிடங்களைப் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்திய பிரதமர் மோடிவரை சாகஸப் பயணத்தை சந்திதுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியின் புது வடிவமான "இன் டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்'’என்ற நிகழ்ச்சியை கிரில்ஸ் தொடங்குவதால் கர்நாடக மாநில புலிகள் காப்பகமான பந்திப்பூர் காட்டுக்குள்தான் பிரில்ஸ் ரஜினியை அழைத்து சென்று, இரண்டு நாள் முழுவதும் படமாக்கினார்கள். ரஜினியே அந்த அனுபவம் அச்சத்தின் உச்சம் என்று வர்ணித்துள்ளார். அவரோட எளிமையை கிரில்ஸ் டீம் மிகவும் பிரமிப்பாக பார்த்து பாராட்டியது என்கின்றனர். படப்பிடிப்பில் ரஜினிக்கு விபத்து என்று பரபரப்பு செய்தி வந்தது. ஆனால், சாகச ஷூட்டிங் முடித்து திரும்பிய ரஜினி, முள்ளு குத்தியது அவ்வளவு தான் என்று கூறினார்.
மேலும் இந்த ஷூட்டிங்குக்கு ரஜினியை பரிந்துரை செய்தது மோடி தான் என்று கூறுகின்றனர். அடுத்ததாக மோடியை தேர்தல் நேரத்தில் பேட்டி எடுத்த இந்தி நடிகர் அக்ஷய் பெயரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக சொல்கின்றனர். அதோடு, பா.ஜ.க.வுக்கு சாதகமாக வாய்ஸ் கொடுப்பவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்குது என்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. 2002-2003 மற்றும் 2003- 04-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தொடர்பாக ரஜினிக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கும் நடைபெற்றது. இந்த நிலையில், வருமானம் தொடர்பாக ரஜினி கொடுத்த டீடெய்ல்ஸை ஏற்றுக்கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக வருமானவரித்துறை அறிவித்தது. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா தொடங்கி பலருடைய வருமானவரி வழக்கிலும் அவங்களோட அரசியல் நிலைப்பாட்டை வைத்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். அதே போல் தான் ரஜினி விஷயத்திலேயும் பா.ஜ.க. கையாண்டுள்ளது. துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி பேசியதும், அதற்காக மன்னிப்பு கேட்கமாட் டேன் என்று ரஜினி சொன்ன நிலையில், இந்த அபராத வழக்கின் சாதகமான நிலைப்பாடு அரசியல் ரீதியாக கவனிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய அந்த வருடத்தில் ரஜினி தரப்பில் 2கோடியே 63 லட்ச ரூபாய் 18% வட்டிக்கு விடப்பட்டு, 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, அடுத்த வருசம் அவர் கொடுத்த கடன் தொகை திரும்பி வரவில்லை என்று கூறுகின்றனர். இது வட்டி பிசினஸ் என்று தனக்கு தெரியாது என்றும், கைமாற்றாக கொடுத்த தொகை தான் என்றும் ரஜினி சொன்ன விளக்கத்தை வருமானவரித்துறை ஏற்றுக்கொண்டதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ரஜினி சொன்னதை அவரது ஆட்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் பண்ணியதுபோல, வரிகட்டாத ரஜினி, கந்துவட்டி ரஜினி என்றும் எதிர்த்தரப்பு மூணு நாளாக ட்ரெண்டிங் செய்தது. எல்லா பக்கமும் அரசியல்தான். ரஜினியை காப்பாத்துவதாக நினைத்து வருமானவரி வலை வீசி ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டது பாஜக.