தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜெ.மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கை எனப் பரபரப்பைக் கண்டுள்ளது தமிழக சட்டப்பேரவை. மறுபுறம் எதிர்க்கட்சி துணைத் தலைவரை நியமிப்பதில் தங்கள் கொடுத்த கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், ''தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்களை பலி கொடுத்த அந்த கோர சம்பவம் குறித்தான ஒரு விசாரணை அறிக்கை தாக்கல், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரசின் தனி தீர்மானம் என ஏராளமான விஷயங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றிருக்கிறது. இவைகளை எல்லாம் நேரடியாக பார்ப்பதற்கும், இதுகுறித்த செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாமல், பொறுத்துக் கொள்ள முடியாத வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் கலவரத்தில் ஈடுபட்டு வெளியேற்றம் செய்யப்படும் அளவிற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைக்கு கூட சட்டமன்றத்திற்கு வராமல் திடீரென்று, சட்டமன்றம் நடைபெறுகின்ற நேரங்களில் மாநகர பகுதியில் எந்தவிதமான போராட்டங்களுக்கும் அனுமதி கிடைக்காது என்ற தகவல் தெரிந்திருந்தும் கூட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை அரங்கேற்றுகிறோம் என்று சொல்லி சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுத்து இருக்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி மேல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஜெயலலிதா ரத்தவெள்ளத்தில் கிடந்தார். சாதாரண வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள் என கூறப்பட்டுள்ளது. நீங்கள் மருத்துவத்துறை அமைச்சர் எனவே அது குறித்து உங்கள் கருத்து என்ன?' என கேட்க, ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட வல்லுநர்களுடன் பேசி உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுப்பார்கள்'' என்றார்.