Skip to main content

“மோடியைப் பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களைப் படியுங்கள்” – அமைச்சர் துரைமுருகன்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Duraimurugan said before talking about Modi  Jayalalitha, read about them

 

திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படியும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

 

திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான எழிலரசன் தலைமையில் நடைபெறும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த பயிற்சி பயிலகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களை போல் மாணவனாக இருந்து வந்தவன் நான். இன்று இருப்பது போல் அன்று வசதிகள் கிடையாது. திமுகவே மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். ஆட்சிக்கு வருவதற்கு மாணவரணி தான் திமுகவுக்கு பக்கபலமாக இருந்தது. பலரும் இயக்கத்தில் இருப்பார்கள் ஆனால் சிலர்‌ மட்டுமே கட்சிக்கு வருவார்கள். இயக்கத்தை பற்றியும், தலைவர்களையும் பற்றி முழுவதும் யார் முழுமையாக தெரிந்து கொள்வார்களோ அவர்கள் தான் கட்சிக்கு வருவார்கள்.

 

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி‌ வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தான் கட்சியின் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்த‌ பயிற்சி‌ வகுப்பை நடத்துகிற மாநில மாணவரணி தலைவர் எழிலரசனுக்கு பாராட்டுக்கள். திருவண்ணாமலையில் முதன் முதலில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை துவக்கியவர்  அண்ணா. அவர் வம்சத்தில் வந்தவர் எழிலரசன். நாம் வரலாற்றை தெரிந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். மோடியை பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களை பற்றி படியுங்கள். 

 

நம்முடைய இனம் கெட்டுப் போக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்ததுதான். பெரியார் இல்லை என்றால் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து இருக்க முடியாது. அவரால் தான் இன்று எல்லோரும் படிக்க முடிகிறது. தலைவர்களை புகழ்வது தவறல்ல. முதலில் படியுங்கள். நான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன். அணிகளில் நிர்வாகிகளாக வருவது பெரிதல்ல, கட்சியின் கொள்ளைகளை புரிந்து கொள்ளவேண்டும். எதைப்பற்றி பேசினாலும் அதை பற்றி புரிந்து கொள்பவர்கள் மாணவர்கள்தான். உங்களை நம்பி இந்த இயக்கம் உள்ளது. அதற்காக முதலில் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள். விவாதம் செய்து கொள்ளைகளை மற்றவர்களுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்குப் புரியவைத்து அவர்களை நம் இயக்கத்தில் சேருங்கள்” என்றார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராகத் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்து கொண்டு பயிற்றுவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேவராஜ், வேலூர் மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் போன்றோர் கலந்து கொண்டனர்.

 

தினசரி சராசரியாக 5 செக்ஷன்களில் திராவிட இயக்க தலைவர்கள் நீதிக்கட்சி முதல் இன்றைய திராவிட ஆட்சி வரை வகுப்புகள் எடுக்கின்றன. முதல்நாள் சுப.வீரபாண்டியன் பயிற்சி வழங்கினார். 3 நாட்களில் 15 வகுப்புகள் நடைபெறவுள்ளன. 15 மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் மூன்று நாள் ஏலகிரியிலேயே தங்கி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவதற்கான தங்கும் வசதி, உணவு போன்றவையும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான அமைப்பினர் செய்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்