Skip to main content

“மக்காச்சோளத்திற்குப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரியைத் திரும்பப்பெற வேண்டும்” - துரை வைகோ

Published on 28/01/2025 | Edited on 28/01/2025
durai vaiko requested to tamilnadu government for The newly announced cess tax on maize should be withdrawn

மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து துரை வைகோ கூறியதாவது, “தமிழ்நாட்டில் பெரும்பாலான  மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பயிராக மக்காச்சோளம் உள்ளது. அது கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்கு அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளது. இந்த நிலையில் 16.12.2024 அன்று அரசாணை எண் 287 இன் படி குறிப்பாக, மக்காச்சோளத்தை மட்டும் அரசால் அறிக்கையிடப்பட்ட வேளான் பொருட்கள் (Notified agri-products) பட்டியலில் சேர்த்து, Agricultural Produce Market Committees (APMC) மூலம் ஒரு விழுக்காடு செஸ் (1% Cess) வரி செலுத்திய பிறகே மக்காச்சோளத்தை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

விதைவிலை ஏற்றம், உரவிலை ஏற்றம் போன்ற காரணங்களால் ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு செலவாகிறது. காட்டுப்பன்றி பிரச்சனையாலும், மழை போன்ற இயற்கை காரணங்களாலும் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு உரிய இலாபமும் கிடைப்பதில்லை. இத்தனை சவால்களை கடந்து மக்காச்சோளத்தை தேவையின் அவசியம் கருதி விளைவிக்கும் விவசாயிகளுக்கு இப்போது கூடுதலாக இந்த செஸ் வரியும் அவர்களின் தலையில் விடிகிறது. 

இதனால் விவசாயிகள் தங்களுடைய விற்பனை விலையை குறைக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த மக்காச்சோளம் ஆலைக்குச் சென்று மீண்டும் கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாக  திரும்பி வரும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டி வருகிறது. ஆதலால், இந்த செஸ் வரியால் மக்காச்சோளத்தை விளைவிக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கு விற்பனை மற்றும் கொள்முதல் ஆகிய இரண்டு நிலைகளிலும் சிரமமும்  நட்டமும் ஏற்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியை நீக்கி, விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்