Skip to main content

அண்ணாமலை மீது தமிழக முதல்வர் வழக்கு

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Tamil Nadu Chief Minister's case against Annamalai

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் வழக்கை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வழக்கின் மனுவில், ‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

அவர் கூறிய கருத்துகள் பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. இது முழுக்க முழுக்க முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள். தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி 8 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக நிர்வாகிகளின் சொத்துப்பட்டியல் என வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் '48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடரப்படும்' என அண்ணாமலைக்கு  நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்