திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்த். இவர் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு மற்றும் கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான கல்லூரியில் கடந்த 29ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்றும் சோதனை நடத்தினர்.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி சோதனையின் காரணமாக தேர்தல் பிரச்சாரப் பணிகள் பாதிக்கப்படுவதாக கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன், வருமான வரித்துறை தனி அமைப்பு. சந்தேகம் வந்தாலும் தேர்தல் நேரத்தில் அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று நினைத்தால் என்ன அர்த்தம். அவர்கள் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டுக்கட்டாக பணம் பிடிப்பட்டிருக்கிறது. கடந்த எட்டு வருடமாக தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியில் இல்லை. கடந்த ஐந்து வருடமாக மத்தியில் அவர்கள் ஆட்சியில் இல்லை. அப்படி இருக்கும்போதே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், நன்றாக சிந்திக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.