தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் திமுக சார்பில் போட்டியிட்ட, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முனுசாமிக்கும், தம்பிதுரைக்கும் சீட் ஒதுக்கியதால் அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் அதிமுகவில் மூன்று ராஜ்யசபா சீட் இருப்பதால் ஒரு பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்து உள்ளனர். அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணி கட்சியான வாசனுக்கு கொடுத்துள்ளது அதிமுகவில் மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இதனையடுத்து அதிமுகவில் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த முன்னாள் பெண் அமைச்சர் கோகுல இந்திரா அதிருப்தியில் கட்சி மாறும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிற்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக பேசி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப் பூர்வ தகவலும் கோகுல இந்திரா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது.