ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்படும் என்பதன் காரணமாக தேர்தலில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பின்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்' எனவும் டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தென்னரசு வேட்பாளராக இறுதி செய்யப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றதும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து நோக்கப்பட்ட நிலையில், டி.டி.வி.தினகரன் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.