பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் முத்து விழா ஜூலை 25ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. ராமதாஸ் உடன் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அந்தந்தப் பகுதிகளில் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய 500-க்கும் மேற்பட்டோர் சிறப்புவிருந்தினர்களாக அழைக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் அன்புமணி இராமதாஸ் தனிப்பட்ட முறையில்தனித்தனியாக சந்தித்து கவுரவித்தார்.
இந்த விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ்,
இதுவரைக்கும் ராமதாஸ் அய்யா பொதுஇடத்தில் அவரது பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது. கட்சித் தலைவர் உள்பட நாங்கள் எல்லோரும் ராமதாஸ் அய்யாவை சந்தித்து பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கிறோம். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று சொல்லி சம்மதிக்க வைத்தோம். இந்தியாவில் உள்ள தலைவர்களையெல்லாம் இந்த விழாவைக்கு அழைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. முதல் அமைச்சர், மத்திய அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்தில் பேசி அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டார்கள். இதனை ராமதாஸ் அய்யாவிடம் சொல்லும்போது அவரது முகம் சுருங்கிப்போனது.
கட்சி ஆரம்பித்தபோது என்னோடு போராடியவர்கள், என்னோடு சிறைக்கு சென்றவர்கள், தியாகம் செய்தவர்களை அழைத்தால் நான் சந்தோஷமாக இந்த விழாவில் கலந்து கொள்வேன் என்றார். இதனை அவர் தெரிவித்தவுடன் மறுபேச்சு பேச முடியவில்லை. மறுபடியும் முதல் அமைச்சர், அமைச்சர்களிடம் பேசி இந்த விழா இப்படி நடக்கிறது என்று பேசிவிட்டோம்.
சின்ன வயதில் என் கையை பிடித்து விடுதியில் விட்ட நாள், நான் படிக்கின்ற காலத்தில் என்னுடன் சேர்ந்து இரவு ஒரு மணி வரை என்னுடைய அறையில் அவரும் படித்த அந்த காலம். சென்னை மருத்துவக்கல்லூரியில் நான் படித்தபோது 1987ல் போராட்டம் நடந்தது. அதில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் அய்யா, என்னுடைய கல்லூரிக்கு அருகில் உள்ள சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லூரி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் மாலையில் நடந்து சென்று சிறையில் போய் பார்ப்பேன். வரும்போது அழுதுகொண்டே வருவேன். இவற்றையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. ஒரு தந்தையாக, மருத்துவராக, போராளியாக, விவசாயியாக இப்படி பன்முகத்தில் ராமதாஸ் அய்யாவை பார்த்திருக்கின்றேன். எத்தனையோ சிரமங்களை, கஷ்டங்களை இந்த மக்களுக்காக ராமதாஸ் அய்யா சந்தித்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் ஒரு வித்தியாசமான தலைவர். பதவி வேண்டாம், பொறுப்பு வேண்டாம், சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் தன் கால் படாது என்று சொல்லி அதனை கடைபிடித்தவர். தொடர்ந்து 40 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, ஒரு இயக்கத்தை தானாக தொடங்கி நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று இந்த இயக்கத்தை வளத்திருக்கிறார்.
படித்து முடித்து திண்டிவனம் மருத்துவமனையில் பணியாற்றியபோது அமெரிக்கா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரது நண்பர்கள் கிட்டதட்ட 20 பேருக்கு மேலாக அமெரிக்கா சென்றுவிட்டார்கள். ராமதாஸ் அய்யாவுக்கும் அந்த வாய்ப்பு வந்தபோது அது வேண்டாம் இங்கேயே இருந்துவிடுறேன். அமெரிக்கா சென்றால் நான் சந்தோஷமாக இருப்பேன். என் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இந்த மக்களுக்காக நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
எங்க அம்மா இல்லையென்றால் இன்று எங்க அய்யா இல்லை. இந்த இயக்கம் வளருவதற்கு எங்க அம்மாவும் முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் இந்த இயக்கம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மருத்துவ பணி பார்த்துவிட்டு, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கட்சிக்காக மக்களை சந்திக்க ராமதாஸ் அய்யா செல்லும்போது அம்மா எந்த தடையும் சொல்ல மாட்டார். இவ்வாறு பேசினார்.