அதிமுக கூட்டணியில் இருந்தாலும் முதல்வர் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் போராட்டங்களை நடத்திவருபவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி வருகிறார்.
ராமதாசின் இந்தப் போராட்டத்தை எடப்பாடி ரசிக்கவில்லை. இட ஒதுக்கீடு தரப்படவில்லை எனில் கூட்டணியிலிருந்து பாமக வெளியேறும் என்றே பாமக நிர்வாகிகளிடம் சொல்லி வந்தது தைலாபுரம். ராமதாசின் போராட்டம் பற்றி கவலைப்படாமல் தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் துவக்கினார் எடப்பாடி. இது, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களைக் கோபப்பட வைத்தது. இந்த நிலையில், ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தார் எடப்பாடி. தனியாக தேர்தல் பிரச்சாரத்தை ஏன் துவக்கினேன் என்பதை விவரித்து, அவர்களை எடப்பாடி சமாதானப் படுத்தினார். தொடர்ந்து நடந்த ஆலோசனையில், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை 27-ஆம் தேதி துவக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத் துவக்கக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மேடையில் ஏற்ற விரும்பி, டாக்டர் ராமதாசை அழைக்க அமைச்சர்கள் தங்கமணியையும் கே.பி.அன்பழகனையும் அனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி. இதற்காக, ராமதாசிடம் எடப்பாடி பேச, 'அமைச்சர்களை அணுப்பி வையுங்கள்' எனச் சொல்லியுள்ளார். அதன்படி, இன்று மாலை தைலாபுரம் தோட்டத்திற்கு தங்கமணியும் அன்பழகனும் சென்று ராமதாஸை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பிற்கு, மாவட்ட அமைச்சரும் வன்னியர்களின் கோரிக்கைக்காக பாடுபட்டு வருபவருமான சி.வி.சண்முகத்தைப் புறக்கணித்துவிட்டார் எடப்பாடி. இன்னும் சொல்லப்போனால், ராமதாசை சந்திக்க அமைச்சர்கள் இருவரை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்திருப்பதை சி.வி.சண்முகத்திடம் எடப்பாடி தெரிவிக்கவில்லை என்கின்றனர். இதனால், தைலாபுரம் தோட்டத்துக்கு அமைச்சர்கள் சென்றிருப்பதை அறிந்து டென்சனாகியிருக்கிறார் சி.வி.சண்முகம்.
இது குறித்து நம்மிடம் பேசும் அதிமுக சீனியர்கள், "கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் உதயநிதி ஸ்டாலின் இன்று காடுவெட்டி கிராமத்திற்குச் சென்று காடுவெட்டி குருவின் மகனை சந்தித்துப் பேசியிருக்கிறார். உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பையும் கொடுத்துள்ளது குருவின் குடும்பம். இதைக் கேள்விப்பட்ட ராமதாஸ், எடப்பாடியை தொடர்பு கொண்டு, சமூகத்துக்காக நாங்கள் வைக்கிற கோரிக்கை எதையும் நீங்க கண்டுக்க மாட்டேங்கிறீங்க என ஆரம்பித்துக் காட்டமாகக் கோபம் காட்டியுள்ளார். அதனால், ராமதாசை சமாதானப்படுத்த தைலாபுரத்துக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார் எடப்பாடி. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு ராமதாசை அழைக்கச் சென்றதாகச் சொல்வதெல்லாம் பொய்! ராமதாசை கூல் பண்ணத்தான் அமைச்சர்கள் சென்றனர்" என்கின்றனர்.
இந்தச் சந்திப்பை அறிந்த ராமதாசுக்கு எதிரான வன்னியர் தலைவர்கள், "இட ஒதுக்கீடு கோரிக்கையைப் பெற்றே தீருவேன் எனச் சொல்லும் ராமதாஸ், தன்னைச் சந்திக்க வந்த அமைச்சர்களிடம் அது குறித்து பேசி, இட ஒதுக்கீடு பிரச்சனையில் எடப்பாடி அரசை சம்மதிக்க வைத்திருந்தால் ஓ.கே.! ஆனா, அதிலெல்லாம் அக்கறை காட்டவில்லை. தன்னுடைய அரசியலுக்காக மட்டுமே அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் ராமதாஸ். மேலும், சி.வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்குப் பிடிக்காது என்பதால் அவரை வேண்டுமென்றே ஓரங்கட்டுகிறார் எடப்பாடி!" என்கின்றனர். தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று அ.தி.மு.க அமைச்சர்கள் ராமதாசை சந்தித்திருப்பது அரசியல் மேலிடங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.