தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 126 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு வலியுறுத்தல்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் 13ம் தேதி வரை சட்டப்பேரவை நடக்கும் அதில் திமுக எம்எல்ஏக்கள் பேச வாய்ப்பு வழங்கும்போது ஆளுநரைப் பற்றித் தாக்கிப் பேசக்கூடாது. குறிப்பாக நேற்று நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தக்கூடாது எனப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆளுநருக்கு எதிராகப் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்ற அறிவுறுத்தல்களையும் தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ கூட்டம் முடிந்த நிலையில் தற்பொழுது திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.