தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார்.
அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள், “இந்த வருடம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், விளம்பரங்களில் தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடாமல் தமிழர் திருநாள், பொங்கல் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்களே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு, “தமிழர் திருநாள் என்பது தமிழ்ப்புத்தாண்டு என்பதைக் குறிக்கின்ற நாள்தான். இது சமத்துவப் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள்” என்றார்.
“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அதிமுக ஆதரித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவர்கள் இதைத் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது இருக்கிறார்கள். அப்படி நடந்தால் ஒன்றுமே இல்லாத நிலை அவர்களின் இயக்கத்திற்கு உருவாகும் என்பதைத் தெரிந்து செய்தார்களோ தெரியாமல் செய்தார்களோ என்று தெரியவில்லை'' என்றார்.
“விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசி உள்ளது வைரலாகி வருகிறதே” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “திமுகவில் மேடையில் ஒரு பேச்சாளர் அநாகரீகமாகப் பேசி இருப்பது வருத்தத்திற்குரியது. அதற்கு தமிழக முதல்வரைப் பொறுத்தவரை எப்பொழுதுமே சாதகமாகப் பதில் சொல்லமாட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி எந்த வகையிலும் அநாகரீகமாக பேசக்கூடாது; ஆளுநரை தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார் முதல்வர். அடுத்தநாளே எல்லா செய்தித்தாள்களிலும் இது செய்தியாக வந்தது.
எனவே, தலைமைக் கழகத்தின் சார்பில் நிச்சயமாக ஆதரவளிக்கின்ற விஷயம் அல்ல இது. யாரோ ஒரு பேச்சாளர் பேசினார் என்பதற்காக இன்று ஆளுநர் மாளிகை வளாகமே வழக்கு தொடுத்து இருக்கிறது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. காரணம் எல்லா கட்சிகளிலும் பேச்சாளர்கள் எப்படி தரம் குறைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் யாரும் அவர்களைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், திமுகவில் எங்கேயோ ஒரு பேச்சாளர் தரக்குறைவாகப் பேசினார் என்பதற்கு நாங்களும் வருந்துகிறோம். ஆனாலும் இதற்கென்று இவ்வளவு விளம்பரம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு தேவையா என்பதுதான் தெரியவில்லை” என்றார்.