தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடவும், 11-ஆம் வகுப்பில் அந்தப் பிரிவுகளில் ஏற்கனவே சேர்ந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி வரும் தமிழக அரசு, வேலைவாய்ப்புகளை எளிதில் பெற்றுத் தரக்கூடிய பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய மேல்நிலைக் கல்வியில் இரு வகையான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. பொதுப் பாடப்பிரிவு, தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆகியவை தான் அந்த இரு பாடத்திட்டங்கள் ஆகும். பொதுப்பாடப்பிரிவில் கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, கணக்குப் பதிவியல் பிரிவு, வரலாறு பிரிவு உள்ளிட்டவை உள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, கணக்குப் பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. பொதுப் பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதே நேரத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியின் காரணமாக எளிதில் வேலைக்கு செல்ல முடியும். அதனால், இந்த பாடங்களுக்கு வரவேற்பு அதிகம்.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன. திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதுகுறித்து பிறப்பித்துள்ள சுற்றறிக்கைகளில் இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இவை உப்பு சப்பற்ற காரணங்கள் ஆகும். இதை ஏற்கவே முடியாது.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடத்த ஆசிரியர்கள் இல்லை என்பது திசை திருப்புவதற்கான காரணம் ஆகும். பல மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் இந்த ஆண்டில் மூடப் படுகின்றன. ஆனால், அந்த மாவட்டத்தில் இந்த பள்ளிகளை இயக்கத் தேவையான ஆசிரியர்களை விட, கூடுதலாக 15 ஆசிரியர்கள் உள்ளதாக அம்மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. எனவே, ஆசிரியர்கள் இல்லை என்பது தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கூறப்படும் பொய் காரணம்.
ஒருவேளை ஆசிரியர்கள் பற்றாக்குறை தான் உண்மையாக காரணம் என்றாலும், அதற்கான தீர்வு என்பது ஆசிரியர்களை போதிய எண்ணிக்கையில் நியமிப்பது தானே தவிர, பாடப்பிரிவுகளை மூடுவது அல்ல. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும் என்று சில மாதத்திற்கு முன்பு தான் தொழிற்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை தொடர வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்திருந்தால், அப்பிரிவுக்கான ஆசிரியர்களை நியமித்திருக்கலாம். ஆனால், அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே 11&ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம். ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப் படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது. இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரிவினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.
மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலைவாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது. தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.