Skip to main content

மருத்துவர் எழிலனின் முதல் சட்டமன்ற பேச்சு..! 

Published on 19/08/2021 | Edited on 20/08/2021

 

Doctor Ezhilan's first assembly speech
                                            கோப்புப் படம் 

 

தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் முதல் பேச்சு பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (18ஆம் தேதி) சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பேசியதாவது; 

 

வெள்ளை அறிக்கை - ஒரு மருத்துவ உதாரணம்
 

ஒரு மருத்துவராக - குறிப்பாக ஒரு தீவிர சிகிச்சை மருத்துவராக ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிசிக்சைப் பிரிவிற்கு ஒரு நோயாளி வந்ததற்குப் பிறகு, ஒரு மருத்துவமனையிலிருந்து பரிந்துரை செய்வார்கள். அப்பொழுது அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் என்ன செய்வோம் என்றால், நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியின் நிலை என்ன, எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, பிறகு தவறான மருத்துவத்தால் நோயின் வீரியம் எவ்வளவு அதிகமாகியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு மருந்து செலுத்துவோம். ஆம், அந்த நோயாளியாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் உள்ளது. நிருவாகச் சீர்கேடு, கொரோனா நோய்த் தொற்று, ஒன்றிய அரசு GST நிலுவைத் தொகையை அளிக்காத ஒரு நிலை, நிருவாகச் சீர்கேடுகளில் அதிகாரவர்க்கமும் சேர்ந்துள்ள நிலை, இவ்வாறான சூழலில் முன்பு மருத்துவம் செய்த மருத்துவர்கள் செய்த தவறான மருத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் நிலையை மக்களுக்கு விளக்குவதுதான் வெள்ளை அறிக்கை. அந்த வெள்ளை அறிக்கை முழுவதும் நம் பொருளாதார நிலை எவ்வாறு இருக்கிறது என்று விளக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை, நிதிநிலை அறிக்கையோடு இணைந்து பார்க்கவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். 

 

ஆட்சிக்கு வரும் முன்பே Parallel Governance
 

"Parallel Governance" அதாவது தமிழ்நாட்டின் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது Parallel Governance என்கின்ற ஒரு ஜனநாயக மாண்பை இந்த நாட்டிற்கு வழிகாட்டினார். எனக்கு முன்பு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கூறியதுபோல் 'ஒன்றிணைவோம் வா' என்ற ஒரு திட்டத்தைத் தீட்டி, எந்தவகையான அதிகாரங்களும் இல்லாமல், கட்சியைக் கொண்டு ஒரு உதவி எண் (Help line) அமைத்து மக்களுக்கு கரோனா முதல் அலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, Community Kitchen மூலம் உணவுகள் வழங்கி, மனுக்களைப் பெற்று, அப்போது இருந்த முதன்மைச் செயலாளருக்கு அளித்தார். இது Parallel Governance க்கான எடுத்துக்காட்டு. அந்த Parallel Governance  அடிப்படையில்தான் நம் தமிழ்நாட்டின் முதல்வரின் அப்போதைய அறிக்கைகளை, அப்போதிருந்த ஆளுங்கட்சியினர் அறிவிப்பாக வெளியிட்டார்கள். அதனாலோ என்னவோ, இத்தனை எண்ணிக்கையில் அவர்கள் இங்கு அமர்ந்துள்ளார்கள். அதனால் அவர்கள் நம் முதல்வருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

 

ஆட்சிக்கு வந்தவுடன் Collective Governance
 

பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம், தற்போது "Collective Governance" நடத்திக்கொண்டிருக்கிறோம். Collective Governance-க்கு எடுத்துக்காட்டு என்ன? முன்னாள் ஆட்சி செய்தவர்களை, முக்கியமாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரை ஒரு சட்டமன்ற ஆலோசனைக் குழுவில் நியமித்து, அனைத்துக் கட்சிகளின் முடிவுகளையும் உள்வாங்கி செயல்படுவது. "many players" என்பார்கள் அதாவது அதிகாரத் துறை, பிறகு பல துறைகளின் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, தன்னார்வ நிறுவனங்களையும் கொண்டு கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 30,000 என்கிற உச்சத்தில் இருந்த கரோனா அலையில், Oxygen தட்டுப்பாட்டை 200 மெட்ரிக் டன்னிலிருந்து 800 மெட்ரிக் டன் வரை உயர்த்தி, Oxygen தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அதிகப்படுத்தி, resuscitation -  உயிருக்கு ஆபத்தான சூழலில் தமிழ்நாட்டில் உள்ள உயிர்களை பாதுகாத்து, கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தி, இன்றைக்கு மூன்று கோடி அளவிற்கு தடுப்பூசிகள் போடும் நிலையை உண்டாக்கி கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள மாபெரும் ஆளுமையைக் கொண்ட நம்பிக்கையில்தான் இன்று நிதிநிலை அறிக்கையை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம்.

 

நிதிநிலை விளக்கம் மூலம் Participatory Governance
 

அந்த நம்பிக்கை, என்ன நம்பிக்கையென்றால் அது மூன்றாவது, "Participatory Governance". முன்பெல்லாம் ஒரு நிதிநிலை அறிக்கை வந்தால், நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைப் படிப்பார், அடுத்தது நிதிச் செயலாளர் ஊடகங்களில் செய்தியாளர்களை சந்திப்பார்கள். இரண்டு, மூன்று பொருளாதார ஆசிரியர்கள் பேசுவார்கள். அதோடு சடங்காக முடிந்து போய்விடும். ஆனால், முதல்முறையாக இன்றைக்கு பட்டித் தொட்டிகளில் சாமானிய மக்கள், தமிழ்நாட்டினுடைய நிதிநிலையை உணர்ந்துள்ளார்கள்.  மிகப்பெரிய ஜனநாயக உணர்தல் இது. அதாவது, ஜனநாயகத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி, இன்றைக்கு ஏழையெளிய மக்கள், நம் நிதிச் சுமை என்ன? வரவு செலவு என்ன என்று பொருளாதார வகுப்புகளில் இருக்கும் வார்த்தை சொற்றொடர்களால் உணர்ந்துள்ளார்கள். இதற்குப் பெயர் Participatory Governance. அந்த Participatory Governance-ஐ ஜனநாயகத்தின் தன்மையை உணர்த்திய ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கிறோம்.

 

நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி
 

இது சமூக நீதிக்கான பட்ஜெட், சமூக நீதிக்கான பட்ஜெட் என்றால், இந்த பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டப் போராட்டம் நடத்தி, இட ஒதுக்கீட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

 

ஆதி திராவிடர் நலத்திற்காக, பழங்குடியின மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரின் முத்தான திட்டமான, ஆதி திராவிட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி படிப்பதற்கான உதவித் தொகையை 5 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். இந்த பட்ஜெட்டினுடைய அளவுகோலை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு திட்டத்தை அவர்கள் தீட்டும்போது, அந்தத் திட்டத்தின் துறை சார்ந்த பயன் மட்டுமில்லாமல் அந்த பயன் பல துறையை சேர்கிற சூழல் அமைந்துள்ளதை நாம் பார்க்கிறோம். அதனடிப்படையில், இன்றைக்கு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஆதி திராவிட மாணவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தியுள்ளார்கள். கல்வி உதவித் தொகை வருடத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் என்ற அளவிற்கு இன்றைக்கு 16 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். முனைவர் பட்டம் பெற்ற பட்டியல் இன மாணவர்களை எடுத்துக்கொண்டு அளவுகோலை பார்த்தால், முக்கால்வாசி பேர் தமிழ் மொழியில்தான் ஆராய்ச்சி செய்திருப்பார்கள். அப்போது முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதி திராவிட மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கொடுப்பதன் மூலம் மாணவருடைய நலன் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும் இது உதவுகிற நிலைமையை நாம் பார்க்கிறோம்.

 

அடுத்து விடுதி. அதாவது, விளிம்பு நிலையில் உள்ள மக்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக மாண்பு. ஆதி திராவிட மாணவர் விடுதியில் நான் பல பயிற்சி வகுப்புகள் நடத்தியதால் சொல்கிறேன், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக, மிக மோசமாக இருக்கும். அவர்களுக்குத் தரமான உணவு கொடுப்பதற்காகவும், கட்டுமானப் பணிகளுக்காகவும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்று பல திட்டங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, பெண்களுக்கான சமூக நீதியை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

 

சுய உதவிக் குழுக்களுக்கு 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி; பெண்களுக்கு இலவச பேருந்து வசதி; புதியதாக 1,000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு; 703 கோடி ரூபாய் டீசல் மானியம், 703 கோடி சிறப்பு மானியம் கொடுத்து, அதிலே மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, திருநங்கைகளும் பயணிக்கும் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

 

தாயுள்ளம் படைத்த முதல்வர், இந்த 'கரோனா' பெருந்தொற்று காலகட்டத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு,  பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 இலட்சம் ரூபாய்; பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் என்று அவர்களின் கல்வி உதவித் திட்டத்திற்காக 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

 

மாற்றுத் திறானாளிகளில் 10,000 பயனாளிகளை கண்டறிந்து, அவர்கள் பயன்பெறுவதற்காக உதவித் தொகை கொடுக்க உள்ளார்கள். RIGHTS Programme மூலம் 1,500 கோடி ரூபாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்காக, ஊட்டச்சத்து குறைபாட்டை நிறைவு செய்வதற்காக பல திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். ஆம் இது சமூக நீதிக்கான பட்ஜெட்.

 

நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல்
 

இது சுற்றுச் சூழலுக்கான பட்ஜெட். எந்த அரசாங்கமும் செய்யாத அளவிற்கு சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான முனைப்பை இந்த பட்ஜெட் மூலம் தமிழ்நாடு அரசு எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டின் முதல்வர் தலைமையிலேயே பருவநிலை மாற்ற மேலாண்மை இயக்கம், அதற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

 

பேரிடர் மேலாண்மைக் குழு, ஈர நிலங்கள் இயக்கம், கடல்சார் மாவட்டங்களைப் பாதுகாக்க 10 கடல் பகுதிகளை மேம்படுத்த Blue Flag Certificate - நீல சான்றிதழ் பெறும் முயற்சியை கொண்டு வந்துள்ளார்கள். அதாவது, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக போராடும் குழுக்களினுடைய கொள்கைகளை உள்வாங்கி, அதனை நடைமுறைப்படுத்தி இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்துள்ளார்கள்.

 

நிதிநிலை அறிக்கையில் தமிழ் பண்பாடு
 

இது தமிழ்நாட்டின் பண்பாட்டை பாதுகாக்கும் பட்ஜெட், ஜூன் 3 - முத்தமிழறிஞரின் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி விருது; அதுமட்டுமல்ல தமிழ் மொழியை அரசு மொழியாகவும், அலுவல் மொழியாகவும், கோப்புகளில் தமிழ் மொழி இடம் பெறுவதற்கான வழிமுறைகளை செய்துள்ளார்கள். அவ்வாறு செய்யும்போது ஒரு சின்ன கோரிக்கையை அந்தத் துறை சார்ந்த அமைச்சரிடம் வைக்க விரும்புகிறேன். பல்வேறு திட்டங்களின் பெயர்கள், வடஇந்திய, இந்தி மொழியில் இருக்கின்றன. அதனால் பல திட்டங்களின் பெயர்கள் நமக்குப் புரிவதில்லை. "Ayushman Bharat Yojana Scheme", "Jal Jeevan Mission Scheme", "Sarva Shiksha Abhiyan Scheme" போன்ற திட்டங்களின் பெயர்களை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து, கோப்புகளில் அவற்றை இடம் பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.

 

தொல்லியல் துறைக்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதாவது வைகை நாகரிகத்தை மீட்டெடுப்பதற்காக அருமையான ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். திறந்தவெளி கண்காட்சியும் வைத்துள்ளார்கள். முக்கியமாக, நெய்தல் நாகரிகத்தை மீட்டெடுக்க, தமிழர்களுடைய கடல் சார்ந்த வரலாற்றை மீட்டெடுக்க, ஆழ்கடல் ஆராய்ச்சி அதாவது, Scuba diving முறையில் ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் வழிசெய்துள்ளார்கள், அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

 

Collateral Benefit வழங்கும் நிதிநிலை அறிக்கை:

 

இது கட்டமைப்புகளுக்கான பட்ஜெட், கட்டமைப்புகள் என்று நாம் சொல்லும்போது, அமெரிக்க நாட்டிலே இதேமாதிரி பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது “Dug the hole and Plug the hole" என்று சொல்வார்கள். அதாவது இக்கட்டான பொருளாதார சூழலில் பொது கட்டுமானங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே கருத்து. நிதியமைச்சர், மிகவும் தெள்ளத் தெளிவாக கட்டமைப்பை வலுபடுத்துவதற்காக கனிசமான நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். 

 

ஊரக வளர்ச்சியிலும் சரி, நகர்ப்புற வார்ச்சியிலும் சரி, மேம்பாலங்களிலும் சரி, நீர்வளத் துறையில் அணைகள் கட்டுவதற்கான நிலலமையிலும் சரி, கட்டுமானங்களோடு வேலை வாய்ப்பு திட்டத்தை இணைத்துள்ளார்கள். முத்தமிழறிஞர் பெயரிலேயே ஒரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை வளர்த்தெடுத்தல் என்று வேலை இல்லா திண்டாட்டத்தையும் தீர்க்க வழி செய்துள்ளார்கள். இதை தான் "Collateral benefit" என்று சொல்வோம். அதாவது இராணுவத் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை "Collateral damage" என்பார்கள். இந்த பட்ஜெட் "Collateral benefit" ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. Collateral benefit என்றால், ஒரு திட்டம் தீட்டும்போது அதன் பயன் 360 டிகிரியில் பல திசைகளில் வெளிப்படும் வகையில் அமைவது. இப்போது கட்டுமானங்களைப் பலப்படுத்தும்போது, ஒரு நாட்டிற்குத் தேவையான, ஒரு மாநிலத்திற்குத் தேவையான பள்ளிக்கூட வளாகங்கள், நெடுஞ்சாலைகள் என்று  கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கை, இன்றைய மோசமான சூழ்நிலையில் நகர்ப்புற, கிராமப்புற ஏழையெளிய, படித்த மக்களுக்கு வேலை கொடுக்கும் திட்டமாகவும் மாறவுள்ளது. இந்த collateral benefit-ஐ நிலைநிறுத்தும்விதமாக, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

 

நிதிநிலை அறிக்கையில் மனித வளம்
 

இது மனித வளத்திற்கான பட்ஜெட். அதாவது, மனித வளம் என்கிறபோது கல்வியையும், சுகாதாரத்தையும் ஒன்றாகப் பார்க்கவேண்டியது அவசியம். மொத்தமாக உயர்கல்விக்கும் சரி, பள்ளிக் கல்விக்கும் சரி, மக்கள் நல்வாழ்வுக்கும் சரி 56 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். பள்ளிக் கல்வியில் முக்கியமாக கரோனா பேரிடர் காலக்கட்டத்தில், இரண்டு வருடங்கள் பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் முறையில் உள்ள இடைவெளியை நேர்த்தி செய்வதற்காக பல்வேறு நுணுக்கமானத் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதன் வெளிப்பாடாக, "எண்ணும் எழுத்தும் இயக்கம்" இருக்கிறது. பிறகு கணினி மூலம், லேப்டாப் மூலம், டச்-ஸ்கிரின் மூலம் கற்றல் என்று கணினி - டேப்லட்டை, கிட்டத்தட்ட 413 ஒன்றியங்களுக்கு தலா 40 Touch Pad-ஐ அளித்துள்ளார்கள்.

 

உயர்கல்வியில் 10 அரசுக் கலைக் கல்லூரிகளை நிறுவுவதற்கான வழி செய்துள்ளார்கள். மருத்துவ செலவுகளை குறைக்கும் மக்களை தேடி மருத்துவம் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு 20 சதவிகிதம் கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம் நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். இதற்கு கரோனா மட்டுமே காரணம் இல்லை. மக்களைத் தேடி மருத்துவம் என்பது பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள திட்டம், அவற்றை நம் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார்கள். நீங்கள் எளிதாகச் சொல்லிவிடலாம். ஒரு வீட்டிற்குச் சென்று ஒரு பிரஷர் மாத்திரையோ, ஒரு சுகர் மாத்திரையோ கொடுக்கும் நிலைதானே என்று. ஆனால், அது கிடையாது. இதனால் உள்ள பயன் என்ன என்று பார்க்கும்போது, tertiary care-ல் உள்ள செலவினங்கள் குறையும். ஏனென்றால், இரத்தக் கொதிப்புக்கும், இரத்த அடைப்புக்கும் மாத்திரை கொடுக்கும்போது அது secondary prevention ஆக அமைகிறது, இதன் வழியே அவர்களுக்கு பக்கவாதம் வருவதைத் தடுக்கிறோம், இருதய நோய் வருவதைத் தடுக்கிறோம், பிறகு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு dialysis செய்யும் செலவுகளை நாம் தடுக்கிறோம். இந்தச் செலவு எல்லாம் ஒரு மருத்துவமனையின் செலவாகும். அந்த செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காக 257.16 கோடி ரூபாய்மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, மருத்துவர்களைக் கொண்டு, செவிலியர்களைக் கொண்டு. இல்லம் தேடி சென்று அவர்களின் சர்க்கரை, பிரஷர் அளவுகளைப் பார்த்து மருந்து கொடுக்கும்போது அவர்களின் tertiary care செலவினை கட்டுப்படுத்தும் திட்டமாக இந்த "மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்" இருக்கிறது. தொடக்கத்தில் சொன்னதுபோல் இது collateral benefit-க்கான திட்டமாக அமைவதை நாம் பார்க்கின்றோம்.

 

ஜனநாயக வழி போராளிகளின் துணை தி.மு.க
 

விவசாயத் துறையில் ஒரு மாபெரும் புரட்சி. வேளாண்மைத் துறைக்கு என தனி பட்ஜெட், அதாவது சென்னை வாசிகளைப் பொறுத்தவரையில், அரிசி எங்கு கிடைக்கிறது என்றால், ரேஷன் கடையில் கிடைக்கிறது. காய்கறிகள் எங்கு கிடைக்கிறது என்று கேட்டால் காய்கறி கடைகளில் கிடைக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் தற்போது வேளாண் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் ரூபாய் இரண்டு கோடி செலவில் அமைத்து, விவசாயம் குறித்து மக்களுக்குப் புரிதல் ஏற்படுத்த, முக்கியமாக இளைஞர்களுக்குப் புரிதல் ஏற்படுத்த வழி செய்துள்ளார்கள். போராடும் விவசாயிகளுக்கு வேளாண் நிதிநிலை அறிக்கையை காணிக்கை செலுத்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக வழியில் போராடும் சக்திகளுக்கு எப்போதும் ஆதரவை வழங்கும் என்பதை நிலை நாட்டியுள்ளார்கள்.

 

ஒரு மருத்துவராக சொல்கிறேன். நீரழிவு நோய்க்கு என்ன சொல்கிறோம் என்றால், அரிசி சம்பந்தப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறோம். ஆனால், வேளாண் துறையில் மக்களைத் தேடி மருத்துவம் தொடர்பில் அறிவிப்பு இருக்கிறது. இங்கு தானிய இயக்கத்தை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால், சிறுதானிய இயக்கத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்து, சிறுதானிய உணவை உட்கொள்ளும்போது, நம் பாரம்பரிய தமிழ் உணவை உட்கொள்ளும்போது, எந்தவகையான நீரிழிவு நோய் பாதிப்பையும் தடுப்பதற்கான விஷயங்களும் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

சங்கரலிங்கனாரும், நெல் ஜெயராமனும் - பேரறிஞர் அண்ணாவும், நமது முதலமைச்சரும்

 

நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாயத்திற்கான ஒரு ஆய்வகம் உருவாக்க அறிவிப்பு வந்திருக்கிறது. நெல் ஜெயராமன் அவர்களுக்கான ஒரு இயக்கம். 

 

நெல் ஜெயராமன், இறப்புப் படுக்கையில் இருந்தபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம் முதல்வர், அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தார். அவருடன் நானும் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. அப்போது நெல். ஜெயராமன், தான் இறக்கும் தருவாயில், தமிழ்நாட்டின் முதல்வரின் கையைப்பிடித்து, தனது 'கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொண்டுவாருங்கள்' என்ற உத்திரவாதத்தை வாங்கினார். ஒன்றரை வருடங்கள் கழித்து, நம் தமிழ்நாட்டு முதல்வர் நெல். ஜெயராமன் பெயரிலேயே 'நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தை' நிலைநாட்டியுள்ளார். அதுதான் நமது முதல்வரின் தனிச் சிறப்பு. இதனை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், எவ்வாறு சங்கரலிங்கனார் தமிழ் நாட்டிற்கு பெயர் வைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது, இறக்கும் தருவாயில் அறிஞர் அண்ணாவிடம் வாக்குறுதி பெற்றாரோ, அதன் பிறகு அண்ணா எவ்வாறு தமிழ்நாடு என்று பெயர் வைத்தாரோ, அதே போன்ற ஒரு தருவாயில், நெல். ஜெயராமன் கேட்ட இயக்கத்தை இன்றைக்கு நிலைநாட்டியுள்ளார் நமது முதல்வர். 

 

நிதிநிலை அறிக்கையில் அதிகார பரவலாக்கம்
 

இது நிருவாக சீர்திருத்தத்திற்கான Budget. நிருவாக சீர்திருத்தம் என்றால் நாம் மிகத் தெள்ளத் தெளிவாக வாயளவில்தான் decentralisation குறித்துப் பேசுகிறோம், அதிகார பகிர்வைப் பற்றிப் பேசுகிறோம், இதனை நமது நிதி அமைச்சர் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அவர் என்ன செய்கிறாரென்றால், ஒரு project வரும்போது, அந்த துறையின் கோப்பு (file)  சுற்றுக்கு விடப்படும். அந்த file, Under Secretary, Joint Secretary, Additional Secretary ஆகியோரது பார்வைக்கு சென்று, மறுபடியும் Financial Department-ன் அதிகாரிகளிடத்தில் அந்த file சுற்றுக்கு வரும். அப்போது ஒரு project நிலுவையியிருந்து முடிப்பதற்கு வரும்போது, கிட்டத்தட்ட 1.1/2வருடங்கள் ஆகிவிடும்.  நிதி அமைச்சர் மாபெரும் நிர்வாக சீர்திருத்தமாக தற்போது என்ன செய்கிறார் என்றால், 'உங்களுக்கு நிதி ஒதுக்கியாயிற்று'. அந்தந்தத் துறை அமைச்சரை "நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுங்கள், இங்கே Finance Department-க்கு circulation வர வேண்டாம். ஆனால், அந்தத் துறை சார்ந்த தணிக்கைக் குழு என்னிடம் இருக்கும் என்று சொல்கிறார். Empowered and marginal oversee என்று சொல்வோம். இது மாபெரும் நிர்வாக சீர்திருத்தம். நம்முடைய நிதி அமைச்சர் திட்டங்களை விரைவாக நடத்தி முடிக்கும் வகையிலான ஒரு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, இந்த Budget-ஐ கொண்டுவந்திருக்கிறார். பிறகு வெளிப்படைத் தன்மை, கண்காணிப்புக் குழுக்கள், Methodology for Assessing Procurement Systems (MAPS) மூலம் e-procurement லிருந்து ஆரம்பித்து Tender முடியும் வரைக்கும் வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்தைக் கொடுக்க வழிசெய்திருக்கிறார். அது மட்டுமல்ல, சட்டமன்ற நிகழ்வுகளை, 100 ஆண்டுகளான சட்டமன்ற உரைகளை பதிவு செய்து, அந்தப் பதிவை கணினிமயமாக்குதல் என்பது மாபெரும் சேவை. ஏனெனில், வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் சட்டமன்றத்தின் அனைத்து உரைகளும் நாட்டினுடைய சொத்து. அவ்வாறான சட்டமன்ற உரைகளின் கோப்பு, தரவுகளை மக்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் வைப்பது, வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தின் 100 ஆண்டுகால வரலாற்றிற்கு இந்த Budget கொடுக்கும் காணிக்கை. 

 

நிர்வாக சீர்திருத்தம் என்பதற்கு அளவுகோல் சொல்கிறார். அனைத்து வகையான நிர்வாக சீர்திருத்தம், வரி சலுகைகள், வரி ஏய்ப்பு அனைத்தையும் நாம் குறுக்கினால் 60,000 கோடி ரூபாய் மிச்சம் செய்யும் அளவிற்கு நமக்கு அளவுகோல் அளித்திருக்கிறார், நம் நிதிநிலை அறிக்கையில்.

 

நிதிநிலை அறிக்கையில் மாநில உரிமைகள்
 

இது மாநில உரிமைகளுக்கான Budget. முதன்மையாக நம் தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு என்ன? Gross Enrolment Ratio, 2035 ஆம் ஆண்டில் நாம் 50% அடைவோம் என்பது. இந்த budget என்ன சொல்கிறதென்றால், Gross Enrolment Ratio இந்த ஆண்டே 51.7 சதவிகிதம் நாங்கள் நடைமுறைப்படுத்திவிட்டோம். உங்களின் கல்விக் கொள்கை வேண்டாம். அது சமூக நீதிக்கு எதிர்ப்பாக இருக்கிறது. மாநில உரிமைகளுக்கு எதிர்ப்பாக இருக்கிறது. அதனால் கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலில் வருவதற்கான  மாநில கல்விக் கொள்கை குறித்து அறிவிக்கும், மாநில உரிமையை நிலை நிறுத்துவதற்கான budget. 

 

இது நிதி ஆதாரங்களுக்காக, நிதிக் கட்டுமானங்களுக்காக 2.0 என்று சொல்லலாம், மாநில சுயாட்சிக்கான 2.0, நிதி உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு ஆலோசனைக் குழுவை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். GSTயை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த Covid காலத்தில் அனைவரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். GST இழப்பீடு 20,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்த budget - வெள்ளை அறிக்கை சொல்கிறது. தற்போது GST நிலுவைத் தொகை, இழப்பீடு தொகையை கொடுப்பது ஒன்றிய அரசின் Constitutional obligation. இது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி. 2022 ஆம் ஆண்டுடன் இதன் வாக்குறுதி முடிகிறது. 2022 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டுகாலத்தில் அரசியல் சாசனத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையென்றால், 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு எப்படி நிறைவேற்றுவார்கள் என்கின்ற கேள்விக் குறியை இந்த சட்டமன்றப் பேரவையில் நான் வைக்கிறேன். அப்படியென்றால் 20,000 கோடி ரூபாய் நம் மாநிலம் பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கிறதா? இல்லையா? அண்ணல் அம்பேத்கர் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஒன்றிய அரசின்கீழ் மாநில அரசுகள் இல்லை, இந்த அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சம பங்கீட்டாளர்கள் என்று சொன்னார். இங்கு அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தே நாம் அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறோம் என்று சொன்னார். அப்படியென்றால், அசாதாரண சூழலில் மட்டும் ஒன்றிய அரசு Unitary structure ஆக செயல்படுகிறது என்று சொன்னார். அது தற்காலிகம் தான். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய நிதி வழங்கலை, ஒரு வரிகட்டும் மாநிலங்களாகவே பார்க்கும் பார்வையை ஒன்றிய அரசு நிறுத்துவதற்காக சட்டன்ற ஆலோசனைக் குழுவை, அதாவது மாநில உரிமைகளின் ஆலோசனைக் குழுவை நிதியமைச்சர் அமைத்துள்ளார்கள். ஆகவே, இது மாநில உரிமைகளை காப்பதற்கான நிதி நிலை அறிக்கை.

 

இந்த சூழலில்தான் இந்து அறநிலையத் துறையை பார்க்கிறோம். ஒரு இலாபம் ஈட்டும், வருவாய் ஈட்டும் துறையாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள், நான் சொன்னதுபோல் சமூக நீதி அடிப்படையில் வழிபாட்டுதாங்களை நிலைநிறுத்தியுள்ளார்கள். அது குறித்து சிலபேர் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள். அமைச்சர் அதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

 

சுதந்திர போராட்ட தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு சிலை
 

இறுதியாக,  25-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் முதல்வராக இருந்தார்; 50-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருந்தது; 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் உள்ளது. கடலூரைச் சார்ந்த தென்னாட்டு ஜான்சிராணி என்று மகாத்மா காந்தியடிகளால் பாராட்டுப் பெற்ற நீலன் சிலை சத்தியாகிரகத்தில் 4 வருடங்கள் சிறைச்சாலைச் சென்று பிறகு, உப்பு சத்தியாகிரகத்தில் கர்ப்பிணி பெண்ணாக சிறைச்சாலைச் சென்று, சிறைச்சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்த காங்கிரஸ் பேரியத்தின் சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடலூரைச் சார்ந்த கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு, அவருடைய கொள்ளுப் பேரனாகிய நான், இந்த அரசு ஒரு சிலை வைக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் என் உரையை நிறைவு செய்கிறேன். என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்