திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி இந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஓராண்டுக் காலத்திற்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகள் கலைஞரின் சாதனைகளை மக்களின் மனதில் பதியச் செய்யும் வகையில் அமைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊர்கள் தோறும் திமுக எனும் தலைப்பில் கிளைக் கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சி மாவட்டங்களிலும் கலைஞரின் முழு உருவச்சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கணினி, இணைய தள வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்க உள்ள நிலையில், அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வட சென்னையில் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஜூன் 20 ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.