Skip to main content

''தேர்தல் வந்தால்தான் திமுகவுக்கு மக்களைப் பற்றிய ஞாபகம் வரும்'' - எடப்பாடி பேச்சு

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

"The DMK will remember the people only when the election comes" - Edappadi speech

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் இரண்டாவது நாளாக 16ந் தேதி பிரச்சாரம் செய்தார். ஈரோடு கனிராவுத்தர் குளம், பிராமண பெரிய அக்ரஹாரம், வண்டிப்பேட்டை  பகுதியில் பழனிசாமி பேசும்போது,

 

"ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சியின் போது ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை தரம் உயர்வு, கனிராவுத்தர் குளம் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி அமைந்து 21 மாதங்களாகியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்துக்கு வரும்போது, ரூபாய்  6 கோடியில் சீரமைக்கப்பட்ட கனிராவுத்தர் குளத்தை பார்க்க வேண்டும். எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இதுவே சாட்சி. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சத்தி-பெருந்துறை சாலையை இணைக்கும் புறவழிச்சாலை திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர்.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தற்போது 25 அமைச்சர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கு முன்பு ஒரு அமைச்சர் கூட இங்கு வரவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் ஈரோட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வந்திருக்கும். அதை விட்டு விட்டு தற்போது வீதி வீதியாக வந்து குறை கேட்கின்றனர். மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள். எனவே, யாரும் ஏமாந்து விட வேண்டாம்.

 

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. இதில், 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். வெளிமாநிலத்தில் இருந்து தரமற்ற பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கி 500 கோடி ஊழல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, பொங்கல் பரிசாக 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனச் சொன்ன ஸ்டாலின், தற்போது 1000 மட்டுமே வழங்கியுள்ளார். ஈரோட்டிற்கு பிரச்சாரத்திற்கு அவர் வந்தால், மீதித் தொகையை கொடுக்குமாறு கேளுங்கள்.

 

மின்கட்டண உயர்வு, குடிநீர், சொத்துவரி உயர்வு தான் திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அதனை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்ப்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். ஆனால், தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், கனவில்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் குறைந்த விலையில் விற்பனையான அம்மா சிமெண்ட் விற்பனையையும் நிறுத்தி விட்டனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கவில்லை. 7 லட்சம் முதியோரின் உதவித்தொகையை நிறுத்தி விட்டனர். எந்த கட்சியும் சாராத,  வாழ வழியில்லாத, ஏழைகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையையும் இந்த அரசு பறித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அப்போது முதியவர்களுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.

 

nn

 

திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனை எதிர்த்து அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவால் அதனை நடத்த வேண்டிய நிலை வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவதாகச் சொன்னவர்கள், இதுவரை நீட் தேர்வினை ரத்து செய்யவில்லை. கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் 564 பேர் இன்று மருத்துவக் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசு செலுத்துகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய போதெல்லாம், மாநில அரசு உடனுக்குடன் உயர்த்தியது. ஆனால், தற்போது தாமதமாக அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. படிக்காதவர்களை மட்டுமல்லாது, படித்தவர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது.

 

நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவினை உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் நான் கேட்டபோது மின்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இலவச மின்சார அளவை உயர்த்துவதாக அறிவிக்கின்றனர்.  தேர்தல் வந்தால்தான் திமுகவினருக்கு மக்களைப் பற்றிய ஞாபகம் வரும். திமுக ஒரு குடும்ப கட்சி. குடும்ப, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த இடைத்தேர்தல் முடிவு பக்கபலமாக இருக்க வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரிசையில் இன்பநிதி வந்தாலும் ஆதரவு கொடுப்போம் என ஒரு அமைச்சர் சொல்கிறார். கருணாநிதி குடும்பத்திற்கு சேவை செய்யவே இவர்கள் அமைச்சராகியுள்ளார்.

 

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு அரணாக; பாதுகாப்பாக இருந்துள்ளது. 33 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. அதிமுகவிற்கு மதமோ, ஜாதியோ கிடையவே கிடையாது. 100 சதவீதம் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. இதையெல்லாம் மறைத்து சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதையெல்லாம் மறந்து விட்டு இஸ்லாமிய மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

 

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சிக்காக 5518 டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. வக்பு வாரிய மானியம் 2 கோடியாக உயர்த்தப்பட்டது. உலாமாக்கள் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. பள்ளிவாசல்களை புதுப்பிக்க 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹஜ் பயணத்திற்கான மானிய நிதி ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டது. ஹஜ் பயணிகள் தங்கி செல்ல 15 கோடி ரூபாயில் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு விலையில்லா சந்தனம் வழங்கினோம். நாகூர் தர்கா குளக்கரை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கி சீரமைக்கப்பட்டது. உமறு புலவர் பெயரில் அரசு விருது, காமராஜர் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் நிரந்தர இருக்கை ஏற்படுத்தப்பட்டது. காயிதே மில்லத்திற்கு  அரசு விழா எடுக்கப்பட்டதோடு மணிமண்டபம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. திப்புசுல்தான், ஹைதர் அலிக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

 

அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் அவைத்தலைவரான தமிழ் மகன் உசேனும் ஒரு இஸ்லாமியரே. இதோடு, அப்துல் கலாம் ஜனாதிபதியாக ஜெயலலிதா ஆதரவு அளித்தார். திமுக எதிர்த்து வாக்களித்தது. இதையெல்லாம் இஸ்லாமிய மக்கள் மறந்து விடக்கூடாது. திமுகவினர் வாக்கு கேட்டு வரும்போது இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். அரசியல் சார்ந்து அவ்வப்போது கூட்டணி அமைக்கப்படும். 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தபோது தப்பில்லை. அரசியல் சூழ்நிலைக்காக வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைப்பார்கள். ஆனால், கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கொள்கைகளை எவராலும் அழிக்க முடியாது. எப்போதும் மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக. தமிழகத்தில் பிறந்த எந்த மதத்தை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டால், துன்பப்பட்டால் முதல் குரல் கொடுக்கிற கட்சியாக அதிமுக இருக்கும் " என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்