அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த ஒரு மாதமாக கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த பணியைதான் திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் செய்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் தொண்டர்கள் சாரை சாரையாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அறிவித்தவுடன் அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் எடப்பாடி அணியினர் டெபாசிட் வாங்கினாலே அதுவே பெரிய விஷயம். அங்கேயும் ஓட்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் விலை பேசினாலும் முடியாது. அங்கு திமுக சிறிது விழித்துக்கொள்ளும். 2வது இடத்திற்கு திமுக வந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். அமைச்சர்கள் எல்லாம் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியை போன்று திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணிகள் அமைந்தவுடன், ஊடகங்களுக்கும், பத்திரிகைக்கும் தெரிவிப்போம். நாங்கள் திமுகவோடு கூட்டணி செல்வது என்பது நடக்கவே நடக்காது என்றார்.