Skip to main content

இது எல்லாம் ரொம்ப தப்புங்க... இப்ப கூடவா ஊழல் பண்ணுவீங்க... திமுக எம்.பி எழுப்பிய சரமாரியான  கேள்வி! 

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

dmk

 


உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் அந்த வைரஸ் அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த சோதனை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இந்தியா வாங்கியது.

பின்னர் அந்தக் கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் பிரித்து வழங்கப்பட்டது. இந்தக் கருவிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் ரேபிட் கிட் தவறான முடிவுகளைக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் தருமபுரி எம்.பி டாக்டர். செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பேரிடர் காலங்களிலும் ரேபிட் டெஸ்டிங் கிட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது அதிமுக அரசு. அசாதாரண சூழலிலும் தவறான முறையில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்றால்... மற்ற துறைகளில் நடந்திருக்கும் முறைகேடுகளை எண்ணிப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை குறித்த கோரிக்கைக்கு முதல்வர் அளித்த பதிலுக்குத் திமுக எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். அதில், பால் பாக்கெட் கேட்டு இருந்தா வீடு தேடி வந்து இருக்கும். அதை விட்டு சிறப்பு ஊதியம் கேட்டா, பாவம் அவரு என்ன பண்ணுவாரு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், MMC பயிற்சி மருத்துவர்களின் COVID ரிசல்ட் இன்னும் வெளியிடாததன் மர்மம் என்ன? RGGH மருத்துவமனையின் இன்றைய நிலை என்ன? என்றும் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்