புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாளை மறுநாள் திறக்கப்பட இருக்கும் நிலையில் காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் வைக்கப்படுவது நமக்கு பெருமை. சபாநாயகர் அருகில் தமிழ் வார்த்தைகளுடன் செங்கோல் வைப்பது பிரதமர் நமக்கு அளித்துள்ள பெருமை. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் 8.50 கோடி தமிழர்கள் சார்பாக அனைத்து எம்.பிக்களும் கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்கவில்லை எனில் இது சரித்திரப் பிழையாகிவிடும்.
142 கோடி நாட்டு மக்களின் பாதுகாவலர் பிரதமர் மோடி. கட்சி சார்ந்து இருந்தாலும் மக்களுக்கானவர் பிரதமர். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனையானது எதிர்பார்க்கப்பட்டது தான். கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளிடம் அத்துமீறி உள்ளனர். இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர் பொன்முடி விவாதத்துக்கு அழைத்துள்ளார். அவருடன் விவாதத்திற்கு நான் தயார்'' என்றார்.