Skip to main content

“அதிர்ச்சியடைந்தேன்; இது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல...” - அமைச்சர் ரகுபதி மீண்டும் கடிதம்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

 'I was shocked; This is not good for the governor's office'- Minister Raghupathi again letter

 

அண்மையில் தொடர்ச்சியாகத் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் இன்னும் அதிகரித்தது. தொடர்ந்து எதிர்ப்பின் காரணமாக ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

தொடர்ந்து 'எங்கள் அமைச்சரவையில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை வேகப்படுத்துவதற்கு ஆளுநர் கொடுக்கக்கூடிய அக்கறையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் கே.சி. வீரமணி ஆகியோர் மீதான வழக்கை துரிதப்படுத்த ஏன் ஆர்வம் காட்டவில்லை' எனத் தெரிவித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி தரக்கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை  இன்று மாலை விளக்கம் ஒன்றை அளித்தது. அந்த விளக்கத்தில், 'அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் பற்றி மாநில அரசிடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான விசாரணையை நடத்தி வரும் மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை எந்த ஒரு தகவலையும் ராஜ்பவனுக்கு கொடுக்கவில்லை' என்று விளக்கம் கொடுத்துள்ளது ஆளுநர் மாளிகை.

 

தொடர்ந்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு பிரஸ் ரிலீஸ் மட்டும் வந்திருக்கிறது. ஆளுநர் தரப்பில் இருந்து சிபிஐ நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளோமா இல்லையா என்பதற்கு ஆளுநர் பதில் சொல்லாமல் மழுப்பலாக அண்டர் லீகல் இன்வெஸ்டிகேஷன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். இது இரண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களை காப்பாற்றுவதற்கு ஆளுநர் எடுத்திருக்கின்ற ஒரு தந்திரமான நடவடிக்கை என்பதை நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை. ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு எதிர்க்கட்சி போல் செயல்படுகிறார்.'' என்றார்.

 

 'I was shocked; This is not good for the governor's office'- Minister Raghupathi again letter

 

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ''அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவானை வழங்குவதை தாமதிக்காமல் அனுமதி தர வேண்டும். ராஜ்பவனில் கோப்புகளைப் பெற்றுக் கொண்டு, ஒப்புதல் தந்துவிட்டு கோப்புகள் வரவில்லை என மறைப்பதா? ஜூலை 3ல் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் உண்மைக்கு புறம்பான தகவல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கோப்புகளைப் பெற்று கையெழுத்து போட்டுவிட்டு விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்பது ஆளுநர் அலுவலகத்துக்கு அழகல்ல'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்