தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுகவை பொறுத்தவரை மூன்று ராஜ்யசபா சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவினரே எடுத்து கொள்ளும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் ராஜ்யசபா சீட் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதில் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதோடு திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் அசம் முகமது அலி ஜின்னா, திமுகவின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிகருமான என்.ஆர்.இளங்கோ, தகவல் தொழிநுட்ப அணி மாநில துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா, திமுகவின் துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம் ஆகியோர் கடும் போட்டியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் குறிப்பாக, திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பேசப்படுகிறது. மேலும் சிறுபான்மையினருக்கும், இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அசம் முகமது அலி ஜின்னா,எம்.எம்.அப்துல்லா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் கடந்த முறை வைகோ மீது இருந்த வழக்கு காரணமாக மாற்று வேட்பளராக அறிவிக்கப்பட்ட என்.ஆர்.இளங்கோவிற்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்கின்றனர். இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.