தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், பிரச்சாரம் நாளை (04/04/2021) இரவு 07.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, நாகை மாவட்டம் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வேதாரண்யத்தில் இன்று (03/04/2021) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "திமுகவின் தேர்தல் பணியைத் தடுக்கவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. திமுக கூடுதலாக 25 இடங்களில் வெல்லும் என ஐ.டி. அதிகாரிகளே சொல்கின்றனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் மோடிக்கு கவலையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயலின்போது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.