Skip to main content

பிரச்சாரத்தைத் தொடங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி! (படங்கள்)

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க.வின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாவட்டந்தோறும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி கிராமத்தில், முத்தாளம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, புதிதாக ‘இல்லம்தோறும் உதயசூரியன்' எனும் தலைப்பில் நேற்று (23/02/2021) பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அப்பகுதி கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்தனர். அப்போது வயதானவர்களின் காலில் விழுந்து ஆசிபெற்ற அவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று பெண்களின் காலில் விழுந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டு வாக்குகளைச் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செந்தில் பாலாஜி, "தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான் முதல்வர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்குகளைச் சேகரித்து வருகிறேன். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். எனக்கு எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என தலைவர் ஸ்டாலின் அறிவிக்கின்றாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன். இந்த 4 சட்டமன்றத் தொகுதியிலும் சுமார்  50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இன்னும் இரு தினங்களில் வேட்பாளருக்கான விருப்ப மனுவினை தலைமை கழகத்தில் நான் வழங்க இருக்கிறேன்" என்றார்.

 

தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பது தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்