'மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமான உறவு இருக்குமே தவிர திமுகவிற்கும் பாஜகவிற்கும் எந்த விதமான உறவும் இருக்காது, பாஜகவிடம் திமுக குறைந்தபட்ச சமரசத்தைக்கூட செய்து கொள்ளாது' என திருமாவளவனின் மணிவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வரின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''அவர் சொல்லியது நல்லது. காரணம் என்னவென்றால் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்ஸோடு சமரசம் செய்து கொள்வதற்கோ, கூட்டணி வைப்பதற்கோ குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்தக் குறைந்தபட்ச தகுதி என்னவென்றால் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது, ஊழலற்ற அரசாங்கத்தை கொடுக்க வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி செய்வதற்கான ஆட்சி இருக்க வேண்டும். இந்த மூன்றுமே திமுகவிற்கு இல்லாத பொழுது எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு, குறைந்தபட்ச சமரசம் பற்றிப் பேசுவார்கள். அதனால் முதல்வருக்கு தெரிந்து விட்டது அருகதை இல்லை என்று. அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைத்தான் பாஜகவின் தலைவராக கடந்த ஒன்றை வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எந்த காலத்திலும் திமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. எனவே முதல்வர் சொல்லியது புதிது ஒன்று அல்ல'' என்றார்.