Skip to main content

 “மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

DMK is not a movement that is afraid of intimidation and poochandi Chief Minister M. K. Stalin

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

 

இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நேற்று  நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ஸ்மிருதி ராணி உள்ளிட்டோர் நேற்று பதிலளித்துப் பேசினர். அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிப்பார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் பதிலுரையைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்தியப் பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார்.‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி.

 

DMK is not a movement that is afraid of intimidation and poochandi Chief Minister M. K. Stalin

இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார் ராகுல் காந்தி. அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். திமுக மக்களவை உறுப்பினர் ஆ.இராசாவை சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.இராசா அவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்ததை திமுகவினர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.“நான் கைது செய்யப்படப் போவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.இராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.

 

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகளை குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய மத்திய  அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.

 

தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலும், மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும், மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்