வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி 24- ஆம் தேதி வரை தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூபாய் 1,000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 25,000 செலுத்த வேண்டும். மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூபாய் 15,000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கான தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால் கட்டணம் திருப்பித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த (17.02.2021) முதல் திமுக விருப்ப மனு விண்ணப்பம் தொடங்கியது.
இந்நிலையில் திமுக விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்.24 ஆம் தேதியிலிருந்து பிப்.28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பிப்.28 ஆம் தேதி மாலை 5 மணிவரை விருப்ப மனுவைப் பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.