Skip to main content

கலைஞர் நினைவு நாணயம் புழக்கத்திற்கு வருமா?- தி.மு.கவினர் எதிர்பார்ப்பு! 

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
DMK expectations on Kalaignar commemorative coin will come into circulation?

மத்திய அரசின் நிசர்வ் வங்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறது.

சென்னையில் வருகிற 18-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார். கலைவாணர் அரங்கில் நடக்கவிருக்கும் இதற்கான விழா ஏற்பாடுகளை தமிழக அரசு கவனித்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து விழாவை நடத்துவது போல இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசியல்கட்சிகளின் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். விழாவை பிரமாண்டப்படுத்தவும், விமர்சியாக நடத்தவும் அரசு அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதேசமயம், தி.மு.கவினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 16-ந்தேதி நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்குத் தேவையான அட்வைஸ்களை மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கலைஞர் நினைவு நாணயம் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி தி.மு.கவினரிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. இதுகுறித்து நாம் விசாரித்த போது, ‘கலைஞர் நினைவு நாணயம், ரிலீஸ் செய்யப்படுவதோடு சரி. மக்கள் புழக்கத்துக்கு வராது. கலைஞர் நினைவு நாணயம் தேவைப்படுபவர்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். 100 ரூபாய் மதிப்புள்ள கலைஞர் நினைவு நாணயம் ஒன்றின் விலை 2,600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தனி நபர்கள் ரிசர்வ் வங்கியில் இந்த தொகையைக் கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இதுதவிர, ஆன்லைன் மூலமும் பணம் செலுத்திப் பெறமுடியும். ஆனால், சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியில் இந்த நாணயம் எப்பொழுது விற்பனைக்கு வரும் எனத் தெரியவில்லை. இது குறித்த அறிவிப்பு எதுவும் இப்போது வரை இல்லை. ஒருவேளை விழாவின் போது அதன் விபரங்கள் தெரிவிக்கப்படலாம்’ என்கிறார்கள் வங்கி ஊழியர் சங்கத்தினர்.

மேலும் நாம் விசாரித்தபோது, ‘கலைஞர் நினைவு நாணயத்துக்காக 12 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்காக எத்தனை நாணயங்கள் தரப்படும் என்கிற விபரங்கள் கிடைக்கவில்லை. மக்களின் புழக்கத்துக்கு கலைஞரின் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இதற்கான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கலைஞர் உருவம் பொறித்த நாணயங்கள், வெறும் நினைவு நாணயங்களாக இல்லாமல், மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்’ என்கிறார்கள் தி.மு.கவினர். 

சார்ந்த செய்திகள்