Skip to main content

"புதுச்சேரியில் பாஜகவின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது..” - துரைமுருகன் கண்டனம்

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

DMK Durai Murugan condemn pondicherry three MLA

 

தமிழகத்துடன் நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இதில், தற்போது என்.ஆர். காங்கரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் அங்கு எந்த அமைச்சர்களும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், அங்கு மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது. 

 

சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். ‘30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்’ எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33ஆக  உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். புதுச்சேரி சட்டமன்றத்திற்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து, பாஜகவின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது. புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

எனவே, ஒன்றிய பாஜக அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு - புதுச்சேரி மக்களின் நலனிலும் - மாநிலத்தில் நிலவும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்