நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இதில், 36 மாவட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட்ட பாமக 16 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 39 ஊராட்சி ஒன்றிய இடங்களில் பாமக வெற்றி பெற்றுள்ளது.ஊராட்சி ஒன்றியங்களைப் பொருத்தவரை, போட்டியிட்டவற்றில் 52 சதவீத இடங்களிலும் மாவட்ட ஊராட்சிகளைப் பொருத்தவரை களமிறங்கிய இடங்களில் 44 சதவீத இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாமக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதியும், துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர். சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி வெளியானது. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது.
இதனையடுத்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் பாமகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர். நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் குறிப்பாக வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் மேட்டூர் எடப்பாடி போன்ற தொகுதிகளில் திமுகவை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். திமுகவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.ஆர்.பார்த்திபன் ஏற்கனவே வீர வன்னியர் பேரவை மற்றும் தேமுதிக கட்சியில் இருந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதாக சொல்கின்றனர். அதனால் இவரை பயன்படுத்தி அப்பகுதியில் இருக்கும் வன்னிய சமுதாய மக்களின் வாக்கு வங்கிகளை கவர திமுகவின் பக்கம் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பாமகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில் திமுகவின் இந்த நடவடிக்கை பாமக நிர்வாகிகள் மற்றும் பாமக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமக மற்றும் அதிமுக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் வன்னிய சமுதாய மக்களையும் திமுக பக்கம் இழுக்க முயற்சி நடைபெறுவதால் பாமக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.