சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருப்பது ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் பேசியதாவது, "அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நமது கட்சியினரைத் தற்போது கைது செய்துவருகிறார்கள். இந்தக் கைதில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? துரைமுருகனை கைது செய்தார்கள், யாரும் வாய் திறக்கவில்லை.
4 மாதம் பிணை கூட தராமல் இருந்தார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொன்றாகக் குறைகூறி நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால் இது, மாரிதாஸை கைது செய்தபோது எங்கே போனது? 4 நாட்களிலேயே வழக்கை உடைத்து வெளியே வந்தாரே, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து வாய் திறக்கவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா, யார் உண்மையான சங்கி என்று. நானா சங்கி? சங்கிப் பசங்களா, யாரைப் பார்த்து யார் சங்கி என்று சொல்றீங்க? திமுகதான் பச்சை சங்கி.. (காலணியைக் கையில் எடுத்துக் காட்டுகிறார்). அமைதியாக இருக்கும் என்னை வெறிபிடிக்க வைத்துவிடாதீர்கள். நானும் கோபத்தை அடக்கி, அடக்கி எவ்வளவோ முயன்று பார்க்கிறேன், என்னால் முடியவில்லை'' என ஆவேசமாகப் பேசினார். சீமானின் பேச்சுக்குத் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிற நிலையில், தற்போது சீமான் மீது திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
“திமுகதான் உண்மையான சங்கி” என மேடையில் காலணியைக் கழட்டிக் காட்டிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் திமுக ஐடி விங் நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர்.