மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் திமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் அதிமுக MLA மாணிக்கம் மீது சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோழவந்தானில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு கொடுக்க திரண்டிருந்த பெண்களின் ஆரத்தி தட்டுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகாரளித்துள்ளனர். சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக MLA மாணிக்கம் போட்டியிடுகிறார்.
அவர் சோழவந்தான் பேரூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுகவினர், அவரை வரவேற்க பெண்களை ஆரத்தி தட்டுடன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் ஆரத்தி தட்டுடன் வரிசையில் நின்ற பெண்களுக்கு, அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்திடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்நிலையில், அதிமுகவினரின் பணப்பட்டுவாடா காட்சிகள் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் சோழவந்தான் தொகுதி திமுக தலைமை தேர்தல் முகவரும், வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளருமான கோகுல்நாத், சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெஸ்டின் ஜெயபாலிடம் சென்று ஆதரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை தகுதி நீக்கம் செய்திட வேண்டுமென புகாரளித்தார். இச்சம்பவம் சோழவந்தான் தொகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி அப்துல் ரகுமான், சோழவந்தான் காவல் நிலையத்தில் பணப்பட்டுவாடா குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்தார். சோழவந்தான் போலீசார், அதிமுக வேட்பாளர் MLA மாணிக்கம் மீது IPC (171) பணம் கொடுத்தல் குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.