
மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகுல் அலி (32) என்ற இளைஞர் வேலூரில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரோகுல் அலி ஏப்ரல் 21 ஆம் தேதி மதியம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மார்க் கடைக்கு மது வாங்குவதற்கு வந்துள்ளார்.
அங்கு ஏற்கனவே மதுபோதையில் இருந்த காட்பாடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த யோகராஜ் (36) மற்றும் சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவர் வடமாநில இளைஞர் ரோகுல் அலியை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணம் பறித்துக்கொண்டுள்ளனர். அந்த இளைஞர் கெஞ்சியும் விடாத அவர்கள் ரோகுல் அலியை அடித்து மிரட்டியுள்ளனர். இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் போலீஸாருக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து யோகராஜ்(36) மற்றும் சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவரை கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.