Skip to main content

“அதிமுக கூட்டணியைக் கண்டு திமுகவுக்கு பயம்” - ஆர்.பி. உதயகுமார்!

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

DMK is afraid of the AIADMK alliance RP Udayakumar

அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவையிn ஆலோசனை கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அரசியல் ரீதியாக நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, "பாஜகவுடன் அதிமுக  கூட்டணி வைப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய தயாரா என அவர்களிடம் முன் வைக்க முடியுமா?  என எடப்பாடியைப் பார்த்து தமிழக முதல்வர் கேட்கிறார்.

அதற்கு, 'பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது ஏன் தமிழக முதல்வருக்கு இப்படி ஒரு நில நடுக்கம் ஏற்படுகிறது?. நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது புண்ணியம். நாங்கள் கூட்டணி வைத்தால் அது பாவமா..? என கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி. நாம் தேர்தல் வியூகத்தை வகுத்து திமுகவை வீழ்த்த கூட்டணி அமைத்திருப்பது அதிமுக தலைமையிலான முதல் வெற்றி.  'திமுகவை எதிர்ப்பதற்கு இடமே இல்லை;  தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி'  என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என்ற பேச்சு எழும் அளவிற்கு உருவாகி இருக்கிறது.

ஆகவே இரண்டாம் இடத்திற்கு போட்டி என்பது மாறி தற்பொழுது ஆட்சி அமைக்கும் நிலைக்கு அதிமுகவுக்கான ஆதரவு உருவாகியுள்ளது என்பதே பேசு பொருளாகி இருக்கிறது. மக்கள் பிரச்சனைக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்  உயர்த்த வேண்டிய விவகாரம் போன்றவை குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் மற்றும் கேரள மாநில முதலமைச்சர் வரும்பொழுது பேச தவறிவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர். அண்டை மாநிலங்களில் நட்பை பாராட்டி கோரிக்கையை கூட தமிழக முதல் அமைச்சர் வைக்கவில்லை. திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 2026இல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வியூகம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். 

சார்ந்த செய்திகள்