
இந்தியாவுக்கு எதிராகவோ பேச அஞ்சும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசித் தாக்கிய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மனிதத்தன்மையற்ற சாடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது.
இலங்கை வடக்கு மாநிலத்தில் உள்ள கிளிநொச்சியில் மீன்வளத்துறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்,‘‘ தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கற்களாலும், கண்ணாடி பாட்டில்களாலும் தாக்கி காயப்படுத்தியதாக தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்த்தேன். உடனடியாக இலங்கைக் கடற்படை அதிகாரியை தொடர்பு கொண்டு, இப்போது தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று பாராட்டினேன்’’ என்று கூறியிருக்கிறார். ஒரு நாட்டின் அமைச்சராக இருந்து கொண்டு இன்னொரு நாட்டின் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட சட்டவிரோதத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசுவது தவறு ஆகும். அமைச்சராக இருக்க டக்ளஸ் தகுதியற்றவர் என்பதையே இது காட்டுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதல் சட்ட விரோதமானது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் இந்திய கடற்பகுதியில் தான் மீன் பிடித்துள்ளனர். ஆனால், சிங்களப் படையினர் தான் ரோந்துக் கப்பல் மூலம் நமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பன்னாட்டு சட்டங்களின்படி குற்றம்.
ஒருவேளை தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தனர் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் கூட, அதற்காக தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் அதிகாரம் சிங்களப்படைக்கு கிடையாது. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்க எந்த பன்னாட்டு மீன்பிடி சட்டமும் அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டிய மீனவர்களை எச்சரித்து அனுப்பலாம்; கைது செய்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம்; கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்பது தான் சட்டம்.
இந்தியா, இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அதைத் தான் கூறுகின்றன. ‘‘இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்தால் கூட அவர்களை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தான் உட்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்களிலோ, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலிலோ ஈடுபடக் கூடாது’’ என்பது தான் 2017-ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான செயலாகும். இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு செயலை, இலங்கை அமைச்சர் நியாயப்படுத்துகிறார் அது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
டக்ளஸ் தேவானந்தா அடிப்படையில் தமிழர் என்றாலும் இராஜபக்சே கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு ஈழத் தமிழர் நலனுக்கும், தமிழகத் தமிழர் நலனுக்கும் எதிராக செயல்பட்டு வருபவர். தேவானந்தா மீது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றது உட்பட 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 2010-ஆம் ஆண்டு அவர் அரசு முறை பயணமாக இராஜபக்சேவுடன் இந்தியா வந்த போதும் இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால், அப்போதிருந்த திமுக & காங்கிரஸ் கூட்டணி அரசு அவரை கைது செய்ய மறுத்து அரசு விருந்தினராக சிறப்பு செய்து அனுப்பி வைத்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்காமல் கொண்டாடும் மனநிலையை அவருக்கு அளித்திருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன்.... இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இந்திய அரசின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதற்காக இலங்கையை இந்திய அரசு மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழ்நாட்டிற்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ பேச அஞ்சும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாடம் புகட்ட வேண்டும்'' இவ்வாறு கூறியுள்ளார்.