கடந்த 6-12-2020 அன்று ராஜபாளையத்தில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும். விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவோம்.’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
கடந்த 10-ஆம் தேதி, ஆண்டிபட்டியில் நடந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். “234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.” என்று பேசினார்.
டிசம்பர் 14-ஆம் தேதி, சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கடந்த தேர்தல்களில் நடந்த தவறை இந்த முறை செய்ய மாட்டோம். இது நமக்கு நெருக்கடியான தேர்தல். எனவே, தேர்தல் கூட்டணி அமைப்பதில் கவனத்துடன் இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் சீட் வழங்கும் கட்சியுடனே, இம்முறை கூட்டணி அமைப்போம்.” என்று அ.தி.மு.க. தலைமைக்கு ‘செக்’ வைக்கும் விதமாகப் பேசினார்.
விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தெற்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் வடக்கு, வத்ராப் மேற்கு, வத்ராப் கிழக்கு ஒன்றியங்களின் சார்பாக, 20-ஆம் தேதி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரநாத்தும், தன் பங்குக்கு, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரை ‘டேமேஜ்’ செய்யும் விதமாகப் பேசியிருக்கிறார்.
“2011 சட்டமன்ற தேர்தலில், கேப்டன் எனக்கு சீட் தந்து, நான் எம்.எல்.ஏ. ஆகியிருந்தால், என் தலைவரை (விஜயகாந்த்) கை நீட்டிப் பேசிய, அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அடித்து நொறுக்கியிருப்பேன்.” எனப் பேச, விசிலும், கைதட்டலுமாக, அக்கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.
தேமுதிக, உள்ளுக்குள் என்ன திட்டம் வைத்திருக்கிறதோ? கட்சி நிர்வாகிகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்களோ?