விஜயகாந்த்தின் தே.மு.தி.க சீட்ஷேரிங் குறித்து புதிய கணக்குகளைப் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அண்மையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மா.செ.க்களையும் முக்கிய பிரமுகர்களையும் அழைத்து விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஆலோசித்துள்ளார்கள். அப்போது விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களையும் அழைத்து நேர்காணல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. சீட்டு கேட்பவர்களில் தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக பண பலம் உள்ளவர்கள் யார் யார் என்று ஒரு பட்டியல் போடப்பட்டுள்ளது என்கின்றனர். அதன் மூலம் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்துகொண்டு பட்டியல் ஒன்றை தயார் செய்துவருகிறது தே.மு.தி.க. அந்தப் பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் அ.தி.மு.க. தலைமை சீட்டு ஒதுக்கினால் போதும் என்று கேட்க இருப்பதாக கூறுகின்றனர்.
அதாவது தங்கள் கட்சியில் வசதியான நபர்களுக்கு, அவர்கள் இருக்கும் பகுதியில் சீட் வேண்டும் என்பது தே.மு.தி.க.வின் டிமாண்டாக இருக்கும் என்கின்றனர். அதே சமயம் அ.தி.மு.க. தலைமையோ, உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா என்கிற சிந்தனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாம.க.வோ 25 சதவீத சீட்வேண்டும் என்று முன்பே அ.தி.மு.க. தலைமையிடம் பேசி இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதனால் வடமாவட்டங்களில் அதிக சீட்டுக்களை அது அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்கிறது. பா.ஜ.க. தரப்பிலிருந்து பல வகையிலும் அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எடப்பாடியும் அவர் சகாக்களும் கூட்டணிக் கட்சிகளுக்கு எப்படியெல்லாம் அல்வா கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.