Skip to main content

தே.மு.தி.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை; தொகுதிப் பங்கீடு குறித்து வெளியான தகவல்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
DMDK. - ADMK negotiation Information released about the block allocation

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மாவட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க.வுடனும் மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

DMDK. - ADMK negotiation Information released about the block allocation

இதனையடுத்து மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) சந்தித்துப் பேசினர். அப்போது தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தே.மு.தி.க. துணைச் செயலாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், அவைத் தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMDK. - ADMK negotiation Information released about the block allocation

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே 2 ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று (06.03.2024) மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளைத் தற்போதும் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்