Skip to main content

“பாமகவுக்கு உடன்பாடு இல்லை, ஆனால்...” - அன்புமணி ராமதாஸ்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 "pmk does not agree with some of the terms mentioned by the government but..." - Anbumani Ramadoss

 

இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (09.01.2023) துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

 

 "pmk does not agree with some of the terms mentioned by the government but..." - Anbumani Ramadoss

 

ஆளுநரின் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டப்பேரவையில் படிக்கும்போது சில வார்த்தைகளையும் சில பத்திகளையும் ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும்.

 

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும் மரபும் ஆகும். அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்