தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா? அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிற ஒரே கட்சி அதிமுக தான். இன்று திமுக என்று சென்னால் ஒன்வே டிராபிக் தான். அங்கு எல்லாமே வீட்டுக்கு தான் போகும். ஆனால் அதிமுக மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. திமுகவில் பாக்கெட்டில் இருந்து எடுப்பார்கள், கொடுக்கமாட்டார்கள். கொடுக்கின்ற கட்சி அதிமுக என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை தண்டையார்பேட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
சுயமரியாதை திருமணத்தை கொண்டு வந்ததே திராவிட இயக்கம் தான். நான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறதோ, இல்லையோ தொண்டர்களுக்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நிதின் கட்கரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை.பிரதமர் சந்திக்க மறுத்தால் திமுக, அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என கூறுமாறு சொன்னேன்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்காரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. பிரதமர் சந்திக்க மறுத்தால், எம்பிக்கள் ராஜினாமா எனக்கூறுமாறு கூறினேன். கெட்டது செய்ய கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் போது, நாம் ஏன் நல்லது செய்ய மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டக்கூடாது. ஆனால், இதனை ஏற்க முதல்வர் மறுத்துவிட்டார்.
எம்.எல்.ஏக்களுக்கு பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார்? மாதா மாதம் படி அளப்பது யார்? தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா? அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.