சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது செயல்படும் விதம் குறித்து அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் முதல்வர் இன்று அமைச்சர் உதயநிதியின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் மூத்த அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், “நல்லாட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இந்த காலகட்டம் மனநிறைவை அளித்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதை நோக்கமாக கொண்டு இந்த ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தொய்வு இருந்தது. அந்த தொய்வை நீக்குவது மற்றும் உயர்வை எட்டுவது என இரு இலக்குகள் நமக்கு இருந்தது. அந்த இலக்கில் முன்னோக்கி நாம் சென்று கொண்டு உள்ளோம்.
கடந்த 20 மாதத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது சாதனை அல்ல. அந்த அறிவிப்புகள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து இருப்பதில் தான் இதில் உள்ள வெற்றி அடங்கியுள்ளது. அனைத்து திட்டங்களாலும் பயன்பெறுவோர் மகிழ்ச்சி அடைந்தால் 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உதவும். அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எப்படி செயல்படுத்தப்படுகிறது; அந்த திட்டத்தை முழுமையாக முடிக்க என்ன செய்ய வேண்டும் என துறையின் செயலாளர்கள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.