அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டிற்காக ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் அவரவர்கள் மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தனர். தற்பொழுது மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 'மதுரை விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. ஆனால், மதுரையில் நடத்தப்படும் அதிமுக மாநாட்டுக்கு விமான நிலைய அதிகாரியிடம் உரியத் தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டுக்கு வருவதால் பெருமளவுக்குப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதிமுகவின் மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே வியக்கும் அளவிற்கு மாநாடு சிறப்பாக அமையும். மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 15 லட்சம் பேர் வர உள்ளனர். மாநாட்டிற்கு தடை கோரிய மனுவால் எதுவும் ஆகாது. மாநாடு குறித்து ஏற்கனவே முறையாக காவல்துறையிடமும், சம்பந்தப்பட்ட துறையிடமும் அனுமதி பெற்றுள்ளோம். உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தேவையான பாதுகாப்பு வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தோம். அதற்கு நீதிமன்றமும் மாநாட்டிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.