








2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை மதுரையில் துவங்கினார். அதன்பின் நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. நாடாளுமன்றத்தில் 3.78% வாக்குகளை அக்கட்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழ்நாட்டில் கவனிக்கப்பட்ட சிலர் அக்கட்சியில் இணைந்தனர். அவர்கள் தேர்தலிலும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் மநீம 2.62% வாக்குகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலிருந்து பலரும் விலகினர். இந்நிலையில், இன்று (15.07.2021) அக்கட்சியின் தொழிற்சங்கம் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் மநீமவின் தொழிற்சங்கத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். ‘நம்மவர் தொழிற்சங்கப் பேரவை’ என அக்கட்சியின் தொழிற்சங்கத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சங்கத்தின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.